கூட்டமாக தொழுகை நடத்த அனுமதிக்காததால் ஆத்திரம்: போலீசாரை தாக்கிய 40 பேர் மீது வழக்கு

கர்நாடகாவின் மங்களூரு மற்றும் ஹூப்ளி பகுதிகளில் கூட்டம் கூடி தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த கூட்டத்தினர் கடுமையாக தாக்கியதில் 4 போலீசார் படுகாயம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டுமென மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் அனைத்து மத வழிபாட்டு கூடங்களும் மூடப்பட்டுள்ளது.

இருப்பினும் கர்நாடகாவின் மங்களூரு மற்றும் ஹூப்ளியில் கூட்டம் கூடி தொழுகை நடத்த சிலர் முயன்றதாக தெரிகிறது. ஆனால் இதற்கு போலீசாரால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கூட்டத்தினர் போலீசார்களை கடுமையாக தாக்கியதாகவும் இதில் 4 போலீசார் படுகாயம் அடைந்ததாகவும் தெரிகிறது.

இதனையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார், போலீசார்களை தாக்கியதாக 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் மங்களூரு மற்றும் ஹூப்ளியில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது