பயணிகளுக்கு சோதனை செய்த 4 விமான நிலைய அதிகாரிகளுக்கு கொரோனா!
- IndiaGlitz, [Sunday,March 29 2020]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்ததை அடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்த அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் சோதனை செய்ய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய ஒவ்வொருவரும் சோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னரே ஊருக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அவ்வாறு வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகளுக்கு சோதனை செய்த 4 விமான நிலைய அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளால் தான் இவர்களுக்கு கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது. நான்கு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பதை தெலுங்கானா மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
இதனை அடுத்து கொரோனா தொற்று பரவிய நான்கு அதிகாரிகளும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை இதுவரை மொத்தம் 67 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் இவர்களில் ஒருவர் நேற்று மரணமடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.