'குட்டி லவ் ஸ்டோரி'யில் இணையும் 4 முன்னணி இயக்குனர்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் திறக்கப்படாததால் திரை உலகமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. இருப்பினும் ஓடிடி பிளாட்பாரம் என ஒன்று இருப்பதால் ஓரளவுக்கு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் முன்னணி இயக்குனர்களும் ஓடிடி பக்கம் திரும்பி திரைப்படங்களையும், ஆந்தாலஜி படங்களையும் இயக்கி வருகின்றனர் என்பது குறித்த செய்திகளை ஏற்கனவே பார்த்துள்ளோம். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் நால்வர் இணைந்து ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கி வருகின்றனர்.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த ஆந்தாலஜி திரைப்படத்திற்கு ’குட்டி லவ் ஸ்டோரி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் கௌதம் மேனன், இயக்குனர் வெங்கட்பிரபு, இயக்குனர் விஜய் மற்றும் இயக்குனர் நலன் குமாரசாமி ஆகிய நால்வரும் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்க உள்ளனர்.

இந்த படம் குறித்த புரமோ வீடியோவை கௌதம் மேனன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். கவிதைத்தனத்துடன் இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பதும், ’குட்டி லவ் ஸ்டோரி’ திரைப்படம் விரைவில் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளிவர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.