கனமழையில் இடிந்து விழுந்த சுவர்- 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்!!!
- IndiaGlitz, [Monday,August 31 2020]
தென்மேற்கு பருவமழையால் கடந்த சில வாரங்களாக வட இந்திய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் பெய்த கனமழையால் நர்மதா நதிக்கரையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாகச் செய்திகள் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது நர்மதை ஆற்றங்கரையில் ஓடும் வெள்ளத்தின் அளவு ஆபத்துக் கட்டத்தை எட்டியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் அப்பகுதியில் பலத்த சேதங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வெள்ளப் பெருக்குக் காரணமாக ஆற்றங்கரை ஒரங்களில் உள்ள குடியிருப்புகள், கட்டிடங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் கூறுப்படுகிறது. இந்நிலையில் ஆற்றங்கரையின் அருகே இருந்த ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. நர்மதை ஆற்றங்கரையின் ஓரத்தில் கட்டப்பட்டிருந்த வீட்டின் சுவர் வெள்ளப்பெருக்குக் காரணமாக இடிந்து விழுந்திருக்கிறது. அந்த விபத்தில் வீட்டிற்குள் இருந்த 4 குழந்தைகள் இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இதேபோல அப்பகுதியில் ஏற்பட்ட பல பாதிப்புகளை சரிசெய்யும் நோக்கில் தற்போது இராணுவப் பேரிடர் மீட்புக்குழு வரவழைக்கப்பட்டு இருப்பதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் நர்மதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தேசியப் பேரிடர் மீட்புக்குழு மற்றும் இராணுவப் பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்து செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்த சில தினங்களுக்கு மத்தியப் பிரதேசத்தில் கனமழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுளள்தாகவும் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.