பருப்பு பாக்கெட்டில் கருப்பு எலி: ஆன்லைன் பர்ச்சேஸ் ஆபத்தானதா?
- IndiaGlitz, [Thursday,August 10 2017]
தற்போது ஆன்லைனில் அனைத்து பொருட்களையும் ஆர்டர் செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. வீட்டில் உட்கார்ந்தபடியே ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து விட்டு பேமெண்ட்டையும் செலுத்திவிட்டால் வீடுதேடி பொருள் வந்துவிடும். இந்த எளிய வழிமுறைகளால் சின்ன பொருட்கள் முதல் பெரிய பொருட்கள் வரை ஆன்லைனில் ஆர்டர்கள் குவிகிறது.
இந்த நிலையில் புகழ்பெற்ற ஆன்லைன் நிறுவனம் ஒன்றில் ஐதராபாத்தை சேர்ந்த சுமன்னா என்பவர் பருப்பு உள்பட சில பொருட்களை ஆகஸ்ட் 6ஆம் தேதி ஆர்டர் செய்துள்ளார். மறுநாள் அவருக்கு பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. அந்த நேரத்தில் பொருட்களை மட்டும் சரிபார்த்துவிட்டு டெலிவரி செய்த நபரை அனுப்பிவிட்டார்
பின்னர் மறுநாள் சாவகாசமாக பொருட்களை சரிபார்த்தபோது பருப்பு பாக்கெட்டில் கருப்பாக ஏதோ ஒரு பொருள் தெரிந்துள்ளது. பின்னர் உற்றுப்பார்க்கையில் அது ஒரு செத்த எலி என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். உடனடியாக தனது செல்போனில் பாக்கெட்டை பிரிக்கும் முன்னரும், பிரித்த பின்னரும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து பின்னர் அந்த குறிப்பிட்ட ஆன்லைன் நிறுவனத்திற்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். நடந்த தவறுக்கு சிறிதும் வருந்தாமல் வேறு பொருளை மாற்றி தருகிறோம் என்று மட்டும் பதில் வந்துள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்த சுமன்னா உடனே ஐதராபாத் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்., இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரி இதுகுறித்து விசாரணை செய்ய சுகாதாரத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளார். தரமான பொருள் என்பதால்தான் அதிக விலை கொடுத்து வாங்குகிறோம். ஆனால் இதுபோன்று கவனக்குறைவுடன் பேக்கிங் செய்யப்படுவது, அதிலும் உணவுப்பொருளில் கவனக்குறைவாக இருப்பது பொதுமக்களின் உயிருக்கே ஆபத்தாகிவிடும். தன்னை போன்று வேறு யாரும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே புகார் கொடுத்ததாக சுமன்னா தெரிவித்துள்ளார்,