அரசியலை விட்டுவிட்டு பிசினஸில் கவனம்… முன்னாள் அமைச்சர் திடீர் முடிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த அதிமுக அமைச்சரவையில் பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் மாஃபா பாண்டியராஜன். இவர் தற்போது சி.எல் எனும் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக பதவி ஏற்றுள்ளார்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், முன்னதாக அமைச்சர் பதவி வகித்தேன். அதனால் தொழிலில் கவனம் செலுத்த முடியவில்லை. தற்போது அடுத்த 5 வருடத்திற்கு தொழில்துறையில் முழுமையாக பங்கெடுக்க விரும்புகிறேன். இதனால் அரசியலுக்கு கொஞ்சம் ஓய்வளிக்க உள்ளேன். ஆனால் அதிமுக பொறுப்புகளில் தொடர்ந்து செயல்படுவேன் என்றும் தெரிவித்து இருக்கிறார்.
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து தனது அரசியல் வாழ்க்கையைத் துவங்கிய மஃபா பாண்டியன் பின்னர் தேமுதிகவில் இணைந்து செயல்பட்டார். அதே கட்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
பின்னர் மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்ட இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் ஆவடி தொகுதியில் நின்று வெற்றிபெற்றார். இதனால் அதிமுக அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார். இதைத்தவிர அக்கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளராகவும் அவர் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் நாசரிடம் தோல்வியடைந்தார். தற்போது மேம்பாட்டு நிறுவனம் ஒன்றின் செயல் தலைவராக பொறுப்பு வகித்து இருக்கும் இவர் அரசியலுக்கு கொஞ்சம் இடைவெளி விடப்போவதாகவும் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout