அம்மா இல்லாத ஒரு வருட தமிழகம்

Jayalalitha

ஒரே ஒரு ஒன்றும், சில சைபர்களும்:

Jayalalitha

அம்மா இல்லாத ஒரு வீடே அலங்கோலமாக இருக்கும் நிலையில் ஒரு மாநிலத்திற்கே அம்மா போல் இருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லாத தமிழகம் கடந்த ஒரு ஆண்டாக எந்த நிலையில் உள்ளது என்பது ஒவ்வொருவரும் அறிந்ததே. ஒன்றுக்கு பின்னால் எத்தனை சைபர் இருக்கின்றதோ அத்தனை சைபர்களுக்கும் ஒரு மதிப்பு உண்டு. ஆனால் அந்த சைபர்கள் அனைத்தும் அந்த ஒன்று இல்லை என்றால் செல்லாக்காசுகளாகிவிடும் என்பதையே அம்மா இல்லாத அதிமுக இன்று உணர்த்துகிறது. கடந்த ஒரு வருடமாக இந்த சைபர்கள் செய்யும் கேலிக்கூத்துக்கள் எப்போது முடியும் என்று ஒவ்வொரு பொதுமக்களும் வருத்தத்துடனும் வலியுடனும் காத்திருக்கின்றனர்.

முதல் வருட நினைவு

Nayanthara

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களை தவிக்க விட்டு மறைந்தார். அவர் மறைவு மட்டுமின்றி மறைந்த நாளும் இன்று வரை மர்மமாக இருந்தாலும், அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பின் காரணமாகவே இன்று அவருடைய முதல் வருட நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

சசிகலாவின் முதல் குரல்

Nayanthara

ஜெயலலிதா இருந்தவரை சசிகலா என்பவரின் குரலைக்கூட தமிழக மக்கள் கேட்டதில்லை. அவருக்கு பணிவிடை செய்யும் ஒரு தோழியாகத்தான் தமிழக மக்கள் சசிகலாவை பார்த்தனர். ஆனால் ஜெயலலிதா இறந்த ஒருசில நாட்களில் சசிகலா, அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்று முதல் உரையையும் நிகழ்த்தினார். அன்றுதான் முதன்முறையாக அவரது குரல் வெளியுலகிற்கு கேட்டது.

ஒபிஎஸ்-இன் ஒருசில மாத ஆட்சி

Nayanthara

ஜெயலலிதா மறைந்த அன்றே அவரது நம்பிக்கைக்கு பாத்திரமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கண்ணீருடன் முதல்வர் பதவியை ஏற்றார். ராமனின் செருப்பை வைத்து பரதன் ஆட்சி செய்தது போல் ஜெயலலிதாவின் நினைவை வைத்து ஓபிஎஸ் ஆட்சி செய்தார். முதல்வர் பதவியை ஏற்ற ஓபிஎஸ் அவர்கள் ஜெயலலிதா பயன்படுத்திய முதல்வர் அறையை கூட பயன்படுத்தாமல் செய்த அந்த ஒருசில மாத ஆட்சி காலம் திருப்திகரமாக இருந்ததாகவே அரசியல் விமர்சகர்கள் கருதினர்.

வர்தா புயலும் ஜல்லிக்கட்டும்

Nayanthara

டிசம்பரில் வர்தா புயல், ஜனவரியில் ஜல்லிக்கட்டு என்ற இரண்டு இக்கட்டான நிலையையும் ஓபிஎஸ் திறம்பட சமாளித்து, ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் கூட இவையெல்லாம் நடந்திருக்குமா? என்று ஆச்சரியப்பட வைத்தார். ஆனால் ஓபிஎஸ் நல்ல பெயர் எடுப்பதை விரும்பாத சசிகலா, அவரை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்திய நாள் முதல் இன்று வரை தமிழகம் தத்தளித்து கொண்டுதான் உள்ளது.

ஓபிஎஸ் தியானத்தால் திருப்பம்

Nayanthara

ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் கட்டுப்பட்டு ஒரு உண்மையான தொண்டனாக இருந்த ஓபிஎஸ், முதல்முறையாக ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்து பின்னர் பத்திரிகையாளர்கள் பேட்டியின் போது வெகுண்டெழுந்தார். அவரது அந்த ஒரே ஒரு பேட்டி, மறுநாள் சசிகலா முதல்வர் பதவியை ஏற்பதை தடுத்தது.

கூவத்தூரில் கும்மாளம்

Nayanthara

ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்த ஓபிஎஸ்க்கு ஆதரவு குவிந்தது. எம்.எல்.ஏக்களும் எம்பிக்களும் அவருக்கு ஆதரவு கொடுக்க தொடங்கினர். ஆட்சியை பிடிப்பது ஓபிஎஸ் அணியா? சசிகலா அணியா? என்ற போட்டி ஆரம்பமானது. கவர்னர் ஒரு முடிவு எடுக்கும் வரை சசிகலாவுக்கு ஆதரவு கொடுக்கும் எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டனர். மக்கள் சேவையில் ஈடுபட வேண்டிய எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் போட்ட கும்மாளத்தை கண்டு தமிழக மக்கள் நொந்து நூலாகினர்

சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு

Nayanthara

இந்த நிலையில் தான் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளிவந்து சசிகலா சிறை சென்றார். ஆனால் சிறை செல்லும் முன் தினகரனை துணை பொதுச்செயலாளராக ஆக்கிவிட்டு சென்றார். இதனால் சசிகலா அணி, தினகரன் அணியாக மாறி அதிமுகவில் குழப்பங்களும், பிரச்சனைகளும் தொடர்ந்தது

நம்பிக்கை வாக்கெடுப்பு

Nayanthara

ஒருவழியாக நீண்ட மெளனத்தை கலைத்த கவர்னர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார். முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி மிகப்பெரிய களேபேரத்திற்கு பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். ஆனால் எடப்பாடியை முதல்வராக தேர்வு செய்த தினகரன் தனிப்பட்ட முறையில் தோல்வி அடைந்தார். முதல்வர் பதவியேற்றவுடன் எடப்பாடி பழனிச்சாமியின் போக்கில் மாறுதல் ஏற்பட்டது. சசிகலாவை ஓபிஎஸ் எதிர்த்தது போல், தினகரனை எதிர்த்து அரசியல் செய்தார் எடப்பாடி. இதனால் எடப்பாடி அணி, தினகரன் அணி, ஓபிஎஸ் அணி என மூன்றாக உடைந்தது

அமைச்சர்களின் உளறல்

Nayanthara

ஜெயலலிதா இல்லாத அமைச்சரவை கேப்டன் இல்லாத கப்பல் போல் ஆனது. ஒவ்வொரு துறைக்கும் பெயரளவிற்கே அமைச்சர்கள் பதவியில் அமர வைக்கப்பட்டு, அனைத்து முடிவுகளையும் ஜெயலலிதாவே அதிகாரிகளின் ஆலோசனைப்படி எடுத்து வந்தார். அமைச்சர்களின் அதிகாரத்தை ஜெயலலிதா பறித்து வைத்திருந்தார் என்று குற்றம் கூறப்பட்டாலும், அவர் செய்தது சரிதான் என்பது இன்றைய அமைச்சர்களின் உளறல் காட்டி கொடுக்கின்றது.

ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களுக்கு அனுமதி

Nayanthara

பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோர்களுடன் நல்ல நட்புடன் இருந்தாலும் ஜெயலலிதா ஒருபோதும் தமிழக நலனுக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களை அனுமதித்ததே இல்லை. குறிப்பாக நீட், உதய், ஜிஎஸ்டி ஆகியவற்றுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தான் உயிருடன் இருந்த நாள் வரை அவை தமிழகத்தின் பக்கம் எட்டிக்கூட பார்க்காமல் நடந்து கொண்டார். ஆனால் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்து வந்த நீட், உதய் போன்ற திட்டங்களுக்கு இப்போதிருக்கும் அரசு எந்தவித எதிர்ப்பு தெரிவிக்காமல் அனுமதி வழங்கியது தமிழகத்தை ஆள்வது தமிழக அரசுதானா? என்ற சந்தேகத்தை எழுப்பியது. ஜெயலலிதா இருந்திருந்தால் அனிதா என்ற மாணவி உயிர்த்தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்பதே அனைவரின் எண்ணமாக இருந்தது

ஆட்சியை அடகு வைத்த ஆளுங்கட்சி

Nayanthara

ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை பிரதமர் உள்பட மத்திய அமைச்சர்கள் அவருடைய வீட்டிற்கு வந்துதான் ஆலோசனை நடத்துவார்கள். ஆனால் அவர் மறைந்த ஒருசில நாட்களில் ஆட்சியையும், மாநிலத்தையும் மத்திய அரசிடம் அடகு வைத்த ஆளுங்கட்சி, போட்டி போட்டுக்கொண்டு பிரதமரை சந்தித்து ஒருவர் மீது ஒருவர் கூறிய புகாரால் தமிழகத்தின் மானம் காற்றில் பறந்தது

பதவிக்கு மட்டுமே விசுவாசமா?

Nayanthara

மத்திய அரசுக்கு பதவிக்காக அடிபணிந்து போயிருப்பதை பார்க்கும்போது இந்த அமைச்சர்கள் ஒரு நாளும் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்தவர்கள் அல்ல என்பதையே உணர்த்தியது. இவர்கள் தங்களுக்கு மட்டுமே தங்களுடைய பதவிக்கு மட்டுமே விசுவாசுமாக இருந்தனர் என்பது வெட்ட வெளிச்சமானது. வார்த்தைக்கு வார்த்தை அம்மாவின் ஆட்சி என்று கூறும் அமைச்சர்கள் அம்மாவின் கொள்கைகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு தமிழகத்தின் நலனை பலி கொடுத்து வருவதை பார்க்கும் மக்களின் மனக்குமுறல் அடுத்த தேர்தலில்தான் தெரியும். ஜெயலலிதாவின் 'வேதா இல்லம்' தான் எங்கள் கோவில், ஜெயலலிதாதான் எங்கள் கடவுள் என்று கூறி வந்த அமைச்சர்கள், அதே இல்லத்தில் வருமான வரி சோதனை நடந்தபோது ஒரே ஒரு அமைச்சரின் வாயிலிருந்து கூட மத்திய அரசை கண்டித்து ஒரு வார்த்தை கண்டனக்குரல் வரவில்லை. இதில் இருந்தே அம்மாவின் மீது இவர்கள் வைத்திருந்த விசுவாசும் தெரிய வருகிறது

தனித்து விடப்பட்ட தலைவி

Nayanthara

இரும்பு மனுஷி, கம்பீரமானவர், உறுதியான மனதுக்கு சொந்தக்காரர் என்றெல்லாம் ஜெயலலிதா புகழப்பட்டாலும் அவருக்கென்று நம்பிக்கையான ஒருவர் தனிப்பட்ட முறையில் யாரும் இல்லை என்பதே சோகம் கலந்த உண்மை. சசிகலா அவருக்கு உண்மையான தோழியாக, பணிவிடை செய்யும் நபராக இருந்தாலும் அதற்காக அவர் எடுத்து கொண்ட விலை மிகப்பெரியது. தமிழக மக்களுக்கு அம்மாவாக திகழ்ந்த ஜெயலலிதா உடல்நலமின்றி மூன்று மாதங்கள் சிகிச்சை பெற்றபோதும், அவரை பற்றிய உண்மையான தகவல்கள் யாருக்குமே தெரிவிக்கப்படாமல் மறைக்கப்பட்டது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய துரோகமாக கருதப்பட்டது. அதுமட்டுமின்றி சொத்துக்காக இன்று பலர் நான் தான் ஜெயலலிதாவின் வாரிசு என்று கூறி அவருடைய புகழுக்கு கறை ஏற்படுத்தி வருவது கொடுமையிலும் கொடுமை

அரசியல் வாரிசை கைக்காட்டாத அதிமுக தலைவர்கள்

Nayanthara

எம்ஜிஆர் தனக்கு பின்னர் அதிமுக இருக்கக்கூடாது என்று எண்ணியதாக பலர் கூறுவதுண்டு, ஏனெனில் அவர் தனது அரசியல் வாரீசாக யாரையும் கைகாட்டவில்லை. அதேபோல் தான் ஜெயலலிதாவும் தனது அரசியல் வாரிசு யார் என்பதை கைகாட்டாமல் சென்றார். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு, பதவிக்காக எந்த சமரசத்தையும் செய்து கொள்வது அழிவை நோக்கி அதிமுக செல்வதற்கு சமம் என்று அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர். இனியாவது அவர்கள் திருந்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்

போர்க்குணம் கொண்ட பெண்

Nayanthara

காமராஜருக்கு பின்னர் ஊழல் செய்யாத அரசியல்வாதிகளே இல்லை என்பதுதான் தமிழகத்தின் நிலை. எம்ஜிஆர் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் மட்டுமே குற்றவாளி, மற்றவர்கள் புனிதமானவர்கள் என்பது அரசியலில் இல்லை. மரணத்திற்கு பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டாலும், ஒரு பெண்ணாக இருந்து காவிரி பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட போராடிய அவருடைய போர்க்குணம் மக்கள் மனதில் என்றும் அழியாமல் இருக்கும். இன்றைய அவருடைய நினைவு நாளில் அவருடைய நல்ல கொள்கைகள், போராடும் குணம், தீர்க்கமாக முடிவெடுக்கும் திறனை இனிவரும் ஆட்சியாளர்கள் பின்பற்ற உறுதியேற்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது.

அம்மா இல்லாத ஒரு வருட தமிழகம்