தமிழக முன்னாள் சிபிஐ அதிகாரி கொரோனவால் உயிரிழப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,May 12 2021]

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தலைமை புலனாய்வு அதிகாரியாக இருந்த, கே. ரகோத்தமன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார்.

72 வயது நிரம்பிய முன்னாள் சிபிஐ  அதிகாரி கே. ரகோத்தமன் கடந்த  நான்கு நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிக்கப்பட்டு, சென்னை, முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். இவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில், இன்று காலை இவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.

ராகோத்தமன்  உளுந்தூர்பேட்டையைச்சேர்ந்தவர். அண்ணா பல்கலைக்கழகத்தில்  தன்னுடைய மேற்படிப்பை முடித்தபின், மத்திய புலனாய்வு துறையில் உதவியாளர் பணியில் சேர்ந்தார்.   இதைத்தொடர்ந்து ஊழல், பொருளாதாரக் குற்றங்கள், வங்கி மோசடி, சிறப்பு மோசடி, பொதுத் துறை நிறுவனங்களில் நடந்த மோசடிகள் குறித்து தீவிர விசாரனைகளில்  ஈடுபட்டு வந்தார்.  இந்தியாவில்  உள்ள பல்வேறு இடங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது.

மத்திய புலனாய்வு துறையில் சுமார் 36 வருடங்கள் பணியாற்றியுள்ளார் ரகோத்தமன். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபோது, சிறப்பு புலனாய்வு குழு  திரு.கார்த்திகேயன் தலைமையில் அமைக்கப்பட்டது. அதில் தலைமை புலனாய்வு அதிகாரியாக பணியாற்றியவர் இவர்.

தன்னுடைய 36 வருட பணிக்காலத்தில், சுமார் 10 வருடங்கள் ராஜீவ் கொலை வழக்கை தீவிரமாக விசாரித்து வந்தார்.  பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களிலும்,  வழக்குகள் குறித்து பல நேர்க்காணல்களிலும்  பேசி வந்தார். Conspiracy to Kill Rajiv Gandhi, Third Degree Crime Investigation Management  உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். Human bomb என்ற ஆவணப்படத்தையும் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.