விராட் கோலி அடுத்தவர் கூறுவதை காது கொடுத்து கேட்பாரா? மனம் திறக்கும் சரந்தீப் சிங்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பதவி வகித்து வரும் விராட் கோலி ஒரு ஆக்ரோஷமான மனிதர். கேப்டனாக களத்தில் இறங்கி விட்டாலே அதிரடி காட்டுவார். எப்போதும் டெஷ்னாகவே இருப்பார். அதோடு அணித் தேர்வு குறித்து தன்னிச்சையாகவே முடிவெடுப்பார், அதில் யார் பேச்சையும் கேட்கமாட்டார். அடிக்கடி நடுநிலையாளருடன் சண்டையிடுவது அவரது வழக்கம். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஒரு திமிர் பிடித்த மனிதன். இப்படியான குற்றச்சாட்டுகள் விராட் மீது தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில் இந்திய முன்னாள் அணித் தேர்வாளர் சரந்தீப் சிங், விராட் கோலி குறித்து சில வெளிப்படையான கருத்துகளை மனம் திறந்து கூறி இருக்கிறார். அதில் விராட் கோலி அடுத்தவர் கூறும் கருத்தை மணிக் கணக்காக காது கொடுத்துக் கேட்கும் இயல்புடைய மனிதர் என்றும் மற்றவர்களின் ஆலோசனைகளைப் பெற்றே எதிலும் முடிவெடுப்பார் என்றும் தெரிவித்து இருக்கிறார். இந்தத் தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் சுவாரசியத்தோடு வைரலாகி வருகின்றன.
சர்வதேசப் போட்டிகளுக்காக கடந்த 2008 ஆம் ஆண்டில் களம் இறங்கியவர் விராட்கோலி. தனது அதிரடியான ஆட்டத்தினால் மட்டும் அல்ல, ஆக்ரோஷமான நடத்தையினாலும் சில நேரங்களில் சர்ச்சையில் சிக்கியவர். இருப்பினும் திறமையான கேப்டஷியிலும் தொடர்ந்து கலக்கி வருகிறார். இதனால் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளுக்கும் இவர் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் ஒரு ஆன்லைன் நிகழ்ச்சியின்போது இந்திய முன்னாள் அணித் தேர்வாளர் சரந்தீப் சிங், விராட் கோலி குறித்து சில கருத்துகளை தெரிவித்து இருக்கிறார். அதில், “அணிக் கூட்டத்துக்கு எப்போது விராட் கோலி வந்தாலும் கூட்டம் ஒரு மணி முதல் ஒன்றரை மணி வரை செல்லும். அடுத்தவர் கூறுவதை காது கொடுத்து கவனமாகக் கேட்பவர் விராட் கோலி.
மற்றவர்கள் அவரைப் பற்றி என்ன நினைக்கிறாரோ எனக்குத் தெரியாது. களத்தில் கொஞ்சம் எதிர் வினைகளில் வெளிப்படையாக இருப்பார். இதை வைத்து அவர் கொதிப்பானவர். ஆக்ரோஷமானவர். கர்வம் பிடித்தவர் என்று நினைப்பார்கள். ஆனால் அவர் கொஞ்சம் கூட அப்படிப்பட்டவர் இல்லை. அவர் அனைவரிடமும் கலகலவென பேசுவார். முடிவு எடுக்கும் முன் அனைவரையும் கலந்தாலோசிப்பார். அணித்தேர்வு கூட்டங்களில் அவர் மிகவும் அமைதியாக இருப்பார். பிறர் முடிவுகளில் தலையிட மாட்டார். கலந்தாலோசித்தே முடிவெடுப்பார்.
விராட் கோலி வீட்டில் வேலையாட்கள் கிடையாது. இவரும் அனுஷ்கா சர்மாவும்தான் அனைவருக்கும் உணவு பரிமாறுவார்கள். இதற்கு மேல் என்ன வேண்டும்? அவர் நம்முடன் இருப்பார். வித்தியாசமின்றி தங்கு தடையில்லாமல் அனைவரிடமும் சகஜமாகப் பேசுவார். ஏன் உங்களுடன் டின்னர் சாப்பிடக்கூட வெளியே வருவார். மற்ற வீரர்கள் அவர் மீது ஏகப்பட்ட மரியாதை வைத்துள்ளனர். மன உறுதி மிக்கவர். மைதானத்தில் அப்படி இருக்கிறாரே என்று கேட்டால் அவர்தான் கேப்டன். அவர்தான் அழுத்தத்தைக் கையாள்கிறார் என்றும் சரந்தீப் சிங் தெரிவித்து உள்ளார். இந்தத் தகவல் தற்போது கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments