திமுக முன்னாள் எம்.பி தற்போது பாஜகவில்!!!

  • IndiaGlitz, [Saturday,November 21 2020]

 

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைந்ததாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு திமுக தரப்பு அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது. அந்த விவகாரத்தின்போது “மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை சிறப்பாக கையாண்டு வருகின்றன. மேலும் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதனால் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை” என கே.பி.ராமலிங்கம் கருத்துத் தெரிவித்து இருந்தார். இதனால் அவர் திமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இந்நிலையில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.பி.ராமலிங்கம் இன்று காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு சென்றதாகவும் அங்கு தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோரை சந்தித்து அவர்களின் முன்னிலையில் பாஜகவில் இணைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து கே.பி. ராமலிங்கத்திற்கு பாஜகவின் அடிப்படை உறுப்பினர் அட்டையை பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி வழங்கினார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் “கே.பி. ராமலிங்கத்தின் வருகையால் கூடுதல் பலம் கிடைத்துள்ளது என்றும் இது பாஜகவிற்கு மேலும் உத்வேகம் அளிக்கிறது என்றும் தெரிவித்து உள்ளார்.