கேரள அழகிகள் மரணத்தில் திடீர் திருப்பம்… 6 பேர் கைது, தொடரும் மர்மம்!
- IndiaGlitz, [Friday,November 19 2021]
கார் விபத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட கேரள அழகிகள் வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் சாலை விபத்து எனக் கருதப்பட்ட இந்த வழக்கு தற்போது 17 நாட்களை கடந்த பிறகு பல்வேறு சந்தேகத்தையும் திடீர் திருப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
2019 ஆம் ஆண்டு கேரள அழகிப்போட்டியில் பட்டம் வென்ற அன்சி கபீர் (25), ரன்னர் அஞ்சனா ஷாஜன் (26) இருவரும் ஆண் நண்பர் ஒருவருடன் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் தங்களது காரில் பயணம் செய்துள்ளனர். அவர்கள் ஃபோர்டு ஃபிகோ காரில் எர்ணா குளம் மாவட்டத்தை சேர்ந்த கொச்சி நகரில் பயணம் செய்தபோது வைட்டிலா எனும் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் அழகிகள் அன்சி கபீர், அஞ்சனா ஷாஜன் மற்றும் இவர்களுடன் வந்த ஆண் நண்பரும் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் கார் டிரைவர் அப்துல் ரகுமான் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் இது சாலை விபத்து என்றே கருத்தப்பட்டது.
தற்போது இந்த விபத்துக் குறித்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார், அழகிகள் சென்ற காரை ஒரு AUDI கார் துரத்தி வந்ததையும் விபத்து நடந்த இடத்திற்கு அருகே அந்தக் கார் இரண்டு முறை நெருங்கிச் சென்றதையும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அந்த காரில் இருந்து ஒருவர் இறங்கி வருவது போலவும் சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது.
இதனால் அழகிகள் சென்ற காரை AUDI கார் சேஸ் செய்து இருக்கலாம், அதனால் கார் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்பது போன்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் அழகிகள் உயிரிழந்த வழக்கு தொடர்பாக சைஜு எனும் நபர் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீனுக்காக விண்ணப்பித்துள்ளார். இதுவும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதைத்தவிர அழகிகள் விருந்துக்காக சென்ற ஹோட்டல் நிர்வாகமும் சிசிடிவி காட்சிகள், டிவிடி காட்சிகள் போன்றவற்றை அழித்து இருக்கிறது. இதுவும் போலீஸ் தரப்பில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே “நெம்பர் 18“ எனப்படும் அந்த ஹோட்டலின் உரிமையாளர் ராய் வயலாட் கைது செய்யப்பட்டு உள்ளார். கூடவே சிசிடிவி காட்சிகளை அழிக்க உறுதுணையாக இருந்த அந்த ஹோட்டலின் ஊழியர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதனால் சாலை விபத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட அழகிகள் வழக்கு தற்போது கொலையாக இருக்குமோ? என்ற சந்தேகத்தையும் திடீர் திருப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் கேரளாவில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.