பணமோசடி வழக்கில் தேடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது!
- IndiaGlitz, [Wednesday,January 05 2022]
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.3 கோடி பணமோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கைதுசெய்யப்பட்டு உள்ளார்.
கடந்த அதிமுக அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்துவந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. இவர் அமைச்சராக இருந்தபோது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாகவும் அதுதொடர்பான மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ.3 கோடி பணமோசடி செய்தார் என்று காவல் துறையில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க அமைச்சர் பாலாஜி முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு டிசம்பர் 17 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தலைமறைவானார். அவரை போலீசார் முதலில் 6 தனிப்படைகள் அமைத்து தேடிவந்தனர். மேலும் உறவினர்கள், தொடர்பில் இருப்பவர்கள் என 600 பேரின் செல்போன்கள் சைபர் போலீசாரால் கண்காணிக்கப்பட்டது.
இதையடுத்து ராஜேந்திர பாலாஜி கேரளா மற்றும் பெங்களூரு பகுதிக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் இன்று கர்நாடகாவில் தனிப்படை போலீசாரால் அவர் கைதுசெய்யப்பட்டு உள்ளார். மேலும் முன்ஜாமீன் தொடர்பாக அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் இந்த கைது நடைபெற்று இருக்கிறது.