ஏ.ஆர்.ரஹ்மான் கூறியது சரிதான்: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்
- IndiaGlitz, [Monday,April 11 2022]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் நாடு முழுவதற்கும் ஹிந்தி தான் இணைப்பு மொழியாக இருக்கவேண்டும் என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ’தமிழ் தான் இணைப்பு மொழி ’என செய்தியாளர்களிடம் கூறினார். அவரது இந்த கருத்துக்கு ஆதரவு குவிந்து வருகிறது.
இதுகுறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியபோது ’ஏ.ஆர்.ரஹ்மான் கூறியது போல் தமிழ் தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழ் ஆங்கிலம் என்ற இரட்டை மொழிக் கொள்கை தான் இருக்கவேண்டும். மும்மொழி கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழை பிரதமரே சுட்டிக்காட்டிப் பேசி அதன் பெருமையை ஒப்புக் கொண்டுள்ளார் என்று கூறினார்.
அதேபோல் இதுகுறித்து அருணன் கூறியபோது, ‘தமிழணங்கு சித்திரத்தை வெளியிட்டதிலும், தமிழ்தான் இணைப்பு மொழி என்று கூறியதிலும் ஏஆர் ரஹ்மானின் சமூக உணர்வு வெளிப்பட்டுள்ளது என்றும், பல பிரபல கலைஞர்களும் எழுத்தாளர்களும் கனத்த மவுனம் காக்கும் போது இது உத்வேகம் தருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.