'சார்பாட்டா பரம்பரை' திமுகவின் பிரச்சார படம்: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கண்டனம்!

'சார்பாட்டா பரம்பரை' திரைப்படத்தின் இயக்குனர் பா ரஞ்சித் அவர்களுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் பாராட்டுகளை குவித்து வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கண்டனம் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படத்தில் எம்ஜிஆர் அவர்களுக்கும் விளையாட்டுத் துறைக்கும் தொடர்பே இல்லாதது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், முழுக்க முழுக்க திமுக பிரச்சார படமாகவே ‘சார்பாட்டா பரம்பரை’ எடுக்கப்பட்டுள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் கடந்த 70களில் எமர்ஜென்சி நடந்தபோது திமுக சந்தித்த பிரச்சனைகள் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளுக்கு திமுகவினர் ஊக்கமளித்த குறித்த காட்சிகள் இருக்கும். ஆனால் இந்த திரைப்படத்தில் விளையாட்டுத் துறையினர்களுக்கு குறிப்பாக குத்துச்சண்டை வீரர்களை எம்ஜிஆர் ஆதரிப்பது போன்ற ஒரு காட்சி கூட இல்லாதது ஏமாற்றமாக இருப்பதாக ஏற்கனவே அதிமுகவினர் மற்றும் நெட்டிசன்கள் சிலர் சமூக வலைதளங்களில் கூறியிருந்த நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களும் இதையே சுட்டிக்காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.