தெருவில் நடமாட முடியாது.. கே.எஸ். ரவிகுமாருக்கு முன்னாள் அமைச்சர் மிரட்டலா?

  • IndiaGlitz, [Friday,December 08 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் நடித்த ’படையப்பா’ படம் குறித்து கேஎஸ் ரவிக்குமார் கூறிய கருத்தை அடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தியை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த் நடித்த ’முத்து’ திரைப்படத்தின் ரீரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்த போது ‘ நான் நீலாம்பரி கேரக்டரை எழுதும்போது ஜெயலலிதா மேடத்தை மனதில் வைத்து எழுதினேன். ஒரு கம்பீரமான பெண்ணுக்கு எப்படிப்பட்ட உடல் மொழி வேண்டுமோ அதையெல்லாம் அவங்களை நினைத்து நான் எழுதினேன்’ என்று கே.எஸ் ரவிக்குமார் கூறியிருந்தார்.

கே.எஸ் ரவிக்குமார் பேச்சுக்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் இதுகுறித்து கூறியபோது, ‘அம்மாவின் ஆளுமை , ஆற்றல், திறமை என்ன? என்பது கே.எஸ்.ரவிகுமாருக்கு தெரியாதா? உண்மையில் அவருக்கு தில் இருந்திருந்தால் ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது இதை சொல்லி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இத்தனை ஆண்டுகளுக்கு கழித்து சொல்வது கோழைத்தனம். புரட்சித்தலைவராக இருக்கட்டும் அம்மாவாக இருக்கட்டும் மறைந்த தலைவர்கள் குறித்து பேசுவது நாகரீகமற்றது’ என்று தெரிவித்தார்

மேலும் ’இனிமேல் அம்மா பத்தி பேசினால் நிச்சயம் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அம்மா இருக்கும்போது இதை சொல்லியிருந்தால் அவர் தெருவில் நடமாடி இருக்க முடியுமா’ என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் அந்த நிகழ்ச்சியில் பேசிய கே.எஸ்.ரவிகுமாரின் பேச்சில் ஜெயலலிதாவை அவமரியாதை செய்யும் வார்த்தைகள் எதுவும் இல்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.