இவ்வளவு பணக்கார வீரரா? தோனியின் சொத்து மதிப்பு குறித்து வைரலாகும் தகவல்!

இந்தியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராகவும் 3 விதமான ஐசிசி போட்டிகளிலும் இந்தியாவிற்கு கோப்பைகளைப் பெற்று தந்தவருமான மகேந்திர சிங் தோனி நேற்று தன்னுடைய 42 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதையடுத்து அவருடைய சொத்து மதிப்பு மற்றும் அவருடைய மற்ற தொழில்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தோனி பள்ளிப் பருவத்திலேயே கால்பந்து பேட்மிட்டண் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் காட்டிவந்ததைப் பார்த்தோம். அதேபோல பிட்னஸ் விஷயத்திலும் தோனிக்கு அலாதியான ஆர்வம் இருந்து வருகிறது. இந்நிலையில் இதே தொழிலும் அவர் இந்தியா முழுக்க முதலீடு செய்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

உடற்பயிற்சி பிரியரான தோனி இந்தியா முழுக்கவே பல்வேறு உடற்பயிற்சி கூடத்தைச் சொந்தமாக நடத்தி வருகிறார். அந்த வகையில் ஸ்போர்ட்ஸ் ஃபிட் வேர்ல்டு என்ற உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளர் தோனிதான் என்று கூறப்படுகிறது.

மேலும் கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட அவர் சென்னை எஃப்சி அணி உரிமையாளர்களுள் ஒருவராக இருந்து வருகிறார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப்பெற்று ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் இவருக்கு அந்த அணி ரூ.12 கோடி ஊதியத்தைக் கொடுக்கிறது.

மேலும் இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகிகளில் ஒருவராக இருக்கும் தோனி அதன் மூலமாகவும் வருமானம் ஈட்டி வருகிறார்.

தோனி பண்ணை வீட்டில் வசித்துக்கொண்டு விவசாயத்தில் ஈடுபட்டு வருவது போன்ற புகைப்படங்களும் வீடியோக்களும் அவ்வபோது இணையத்தில் வைரலாகி வருவதைப் பார்த்திருப்போம். அந்த வகையில் ராஞ்சியில் உள்ள அவரது பண் வீடு 7 ஏக்கரிலும் மிகப் பிரம்மாண்டமாக இருக்கிறது. இதில் விளையும் பொருட்கள் நேரடியாக ஏற்றுமதி செய்யப்பட்டு அதன் மூலமாக தோனிக்கு வருமானம் கிடைத்து வருகிறது.

ராஞ்சி பண்ணை வீட்டைத் தவிர தோனிக்கு மும்பை மற்றும் பூனே பகுதிகளில் பிரம்மாண்ட பங்களா வீடுகள் இருக்கின்றன. மேலும் பூனே கடற்கரையை ஒட்டி தோனி புதிய வீட்டை கட்டி வருவதாக அவருடைய மனைவி சாக்ஷி தோனி சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கிய தோனி அதன் மூலம் ‘தி ரேர் ஆஃப் தி லயன்’ அனிமேஷன் திரைப்படத்தை தயாரித்து இருந்தார். தற்போது நேரடியாக தமிழ் திரைப்படமான ‘லெட்ஸ் கெட் மேரீட்’ திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண், இவானா, நடிகை நதியா, யோகி பாபு போன்றோர் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தோனி எண்டர்டெயின்மெண்ட் திரைப்படங்களைத் தயாரிப்பதைக் காட்டிலும் விளம்பரப்படங்களைத் தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

இவையெல்லாவற்றையும் விட தோனி ஒரு பைக் பிரியர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அந்த வகையில் தோனியின் சேகரிப்பில் பழமையான பைக் முதற்கொண்டு சமீபத்தில் மார்கெட்டில் வந்திருக்கும் பைக்குகள் வரை விலைமதிப்பற்ற பல பைக்குகள் இருக்கின்றன. மேலும் விலைமதிப்பற்ற பல கார்களையும் தன்னுடைய சேகரிப்பில் வைத்திருக்கிறார்.

இப்படி சென்னையின் எஃப் சி கால்பந்து உரிமை, ஓட்டல், உடற்பயிற்சி கூடம், இயற்கை விவசாயம், தயாரிப்பாளர் என்று பல்வேறு அவதாரங்களைக் கொண்டிருக்கும் தோனியின் சொத்து மதிப்பு ரூ.1,040 கோடி எனக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.