தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை! அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Friday,August 16 2019] Sports News
கடந்த 1988ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய தமிழகத்தை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் விபி சந்திரசேகர் நேற்றிரவு தனது இல்லத்தில் தூங்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள தகவல் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது
விபி சந்திரசேகர் அவர்கள் சென்னை மைலாப்பூரில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதை சென்னை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்றிரவு விபி சந்திரசேகர் தனது அறையில் இருந்து நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் கதவை தட்டியதாகவும், ஆனால் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது அங்கு அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கி பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ந்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விபி சந்திரசேகரின் உடலை மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது
விபி சந்திரசேகர் மறைவிற்கு தமிழகத்தின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான ஸ்ரீகாந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார். விபி சந்திரசேகர் மறைவை தன்னால் நம்ப முடியவில்லை என்றும், அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்றும், ஆனால் அவருக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை என்றும் கூறினார். ஹர்பஜன்சிங் உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்கள் விபி சந்திரசேகர் மறைவிற்கு தங்கள் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் கடந்த 2012ஆம் ஆண்டு தமிழக ரஞ்சி கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருந்த விபி சந்திரசேகர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தல தோனியை அணிக்கு இணைக்க முக்கிய பங்கு ஆற்றினார். மேலும் இவருக்கு சொந்தமான காஞ்சி வீரன்ஸ் அணி டிஎன்பிஎல் தொடரில் விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது