சுபஶ்ரீ விவகாரத்தில் விஜய் விளம்பரம் தேடுகிறார்: முன்னாள் பெண் அமைச்சர்
- IndiaGlitz, [Friday,September 20 2019]
நேற்று நடைபெற்ற ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், ‘பேனர் விழுந்ததுல சுபஶ்ரீங்கற ஒரு சகோதரி உயிரிழந்துட்டாங்க. இதுக்கு யார் காரணமோ, அவங்களை விட்டுட்டு, லாரி டிரைவரைக் கைது பண்றாங்க. பேனர் பிரின்ட் பண்ண பிரின்டர்ஸ்க்கு சீல் வைக்குறாங்க. சம்பந்தப்பட்ட முன்னாள் கவுன்சிலரை ஏன் கைதுசெய்ய முடியல? சட்டம் நியாயத்தைச் செய்யணும்’ என்று பேசினார்.
விஜய்யின் இந்த பேச்சுக்கு நிச்சயம் ஆளுங்கட்சி தரப்பினர்களிடம் இருந்து விமர்சனம் வரும் என்று எதிர்பார்த்ததே. ஏற்கனவே அதிமுகவின் வைகைச்செல்வன், பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நிலையில் தற்போது முன்னாள் அதிமுக அமைச்சர் பா.வளர்மதி அவர்கள் இதுகுறித்து கூறியதாவ்து:
தங்கள் படம் வெளியாகும் போதெல்லாம், சர்ச்சையாகப் பேசி விளம்பரம் தேடுவது நடிகர்களுக்கு வழக்கமாகிவிட்டது. சுபஶ்ரீ இறந்தது அனைவருக்கும் வருத்தமான விஷயம். சம்பந்தப்பட்ட முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதில் அரசியல் செய்வதற்கு என்ன இருக்கிறது? ஆளுங்கட்சியை விமர்சித்தால் விளம்பரம் தேடிக்கொள்ளலாம் என்பதால் நடிகர் விஜய் இவ்விவகாரத்தில் தேவையற்ற கருத்துகளைப் பேசுகிறார்.
இதே பேனரை எதிர்க்கட்சியினர் வைத்திருந்து, விபத்து நேர்ந்திருந்தால், விஜய் இப்படிப் பேசியிருப்பாரா? ஆளுங்கட்சியை விமர்சிப்பதன் மூலம் தன் படத்துக்கு விஜய் விளம்பரம் தேடிக்,கொள்கிறார். இதில் அரசியல் செய்வது நல்லதல்ல” என்று தெரிவித்தார்.