முன்னாள் அதிமுக அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
- IndiaGlitz, [Tuesday,August 10 2021]
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் வருமான வரித்துறையினர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் எஸ்பி வேலுமணி. இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்த நிலையில் திமுகவின் ஆர்எஸ் பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் ஆகியோர் அவர் மீது லஞ்ச புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான கோவை வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 55 இடங்களில் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எஸ் பி வேலுமணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக வெளிவந்துள்ள தகவலை அடுத்து அவருடைய வீட்டின் முன் அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். மேலும் கோவை மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஒன்பது தொகுதிகளில் எம்எல்ஏக்களும் அவரது வீட்டின் முன்பு குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது நடைபெற்று வரும் சோதனையின் முடிவில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக என்பது குறித்து தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.