தமிழகத்திற்கு திடீர் மஞ்சள் அலர்ட்… கனமழைக்கு வாய்ப்பா?

  • IndiaGlitz, [Tuesday,March 01 2022]

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பொழியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுபகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 3 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் இலங்கை கடற்கரையை நோக்கி நகர இருக்கிறது. இதனால் தமிழகம், காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறிய இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதையடுத்து வரும் 3ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் 4 ஆம் தேதி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா. செந்தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து 5 ஆம் தேதியும் தமிழகத்திற்கு மழை பொழிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.