என் வாழ்க்கையே வீணாகிவிடும், மன்னித்துவிடுங்கள்: விஜய்சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த இளைஞர்!

  • IndiaGlitz, [Monday,October 26 2020]

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்து அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளிவந்தது. இதனை அடுத்து திரையுலகினரும் அரசியல் கட்சித் தலைவர்களும் விஜய் சேதுபதிக்கு கண்டனம் தெரிவித்ததோடு அந்த படத்தில் இருந்து அவர் விலக வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும் முத்தையா முரளிதரனே விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்றும் தன்னுடைய படத்தில் நடிப்பதால் அவருடைய திரையுலக வாழ்வில் பாதிப்பு ஏற்படுவதை தான் விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார். இதனை அடுத்து ’நன்றி வணக்கம்’ என தனது டுவிட்டரில் தெரிவித்திருந்த விஜய் சேதுபதி, அந்த படத்தில் இருந்து விலகியதாக அறிவித்தார். இதனுடன் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது.

இந்த நிலையில் திடீரென ’800’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக வந்த தகவலை அடுத்து, டுவிட்டரில் மர்ம நபர் ஒருவர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்திருந்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் அந்த இளைஞர் இலங்கையைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது.

இதனை அடுத்து இன்டர்போல் உதவியுடன் அந்த இளைஞரை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த நிலையில் விஜய் சேதுபதிக்கு மிரட்டல் விடுத்த இலங்கை இளைஞர் சமூக வலைத்தளத்தில் கதறியபடி கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ’என்னுடைய அடையாளம் வெளியே தெரிந்தால் என் வாழ்க்கையை வீணாகி விடும் என்றும், என் குடும்பத்திற்காகவும் என்னை மன்னித்து விடுங்கள்’ என்றும் அவர் கூறியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.