இந்தியாவில் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு… அதிர்ச்சி தகவல்!
- IndiaGlitz, [Tuesday,November 30 2021]
உத்திரப்பிரதேச மாநிலம் மதுராவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட 4 வெளிநாட்டு பயணிகளிடம் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
தென்ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி புதிய உருமாறிய கொரோனா வைரஸான ஒமைக்ரான் பாதிப்பு முதன்முதலாகக் கண்டறியப்பட்டது. கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதம் மற்றும் அதன் மரபணுவில் அதிகமுறை உருமாற்றம் அடைந்த இந்த ஒமைக்ரான் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவும் தன்மைக் கொண்டது என்றும் கொரோனா தடுப்பூசியை செயலிழக்கும் தன்மைக் கொண்டது என்றும் விஞ்ஞானிகள் கவலை தெரிவித்து வந்தனர்.
இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கப் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தில் நேற்று வெளிநாட்டு பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 2 பெண்கள் உள்பட 4 பேரிடம் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் அவர்கள் பயணித்த இடங்களில் உள்ள நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை தென் ஆப்பிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, மொசாம்பிக், மாலவி, லெசோதோ, செஷல்ஸ், இங்கிலாந்து, இஸ்ரேல், ஹாங்காங் போன்ற நாடுகளில் ஒமைக்ரான் பரவியதை அடுத்து அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.