தமிழகத்தில் மீண்டும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு அனுமதி!!! வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்த தமிழக அரசு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 23 ஆம்தேதி இரவு முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதில் பல விதிமுறைகள் மத்திய அரசால் தொடர்ந்து தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேறு மாநிலங்களுக்குப் புலம்பெயர்ந்து வேலைப்பாத்து வந்த தொழிலாளர்கள் கொரோனா அச்சத்தாலும் பொருளதார இழப்பீட்டாலும் சொந்த மாநிலங்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர். இதற்காக பல நூறு கிலோ மீட்டர் தூரம் காலால் நடந்து சென்ற சம்பவமும் இந்தியா முழுக்க அரங்கேறியது. மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையுற்று இருந்ததால் வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்குச் செல்லும் பொருட்டு சிறப்பு ரயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இப்படி கடினப்பட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற வெளிமாநில தொழிலாளர்கள் அங்கே வேலை வாய்ப்பு இல்லாமல் அவதிப்படும் நிலை அதிகரித்து இருப்பதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
தற்போது ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தின் சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் கட்டிட நிறுவனங்கள் ஊழியர்களை பணிக்கு அமர்த்த திட்டமிட்டு வருகின்றன. அந்நிறுவனங்கள் ஏற்கனவே தங்களிடம் வேலைப் பார்த்த வெளிமாநிலத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தவும் அவர்களை தமிழகத்திற்கு அழைத்து வரவும் விருப்பத் தெரிவித்து இருக்கின்றன. இதுகுறித்து தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கையும் விடுக்கப் பட்டு இருக்கிறது.
இந்தக் கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு வெளிமாநில தொழிலாளர்களை மீண்டும் தமிழகத்தில் பணியமர்த்த அனுமதி அளித்திருக்கிறது. மேலும் அவர்கள் தமிழகத்தில் வந்து பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளையும் தமிக அரசு வகுத்துக் கொடுத்திருக்கிறது. இந்த விதிமுறைகளை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் அல்லது அவர்களை அழைத்து வரும் ஏஜென்சிகள் முறையாகப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த விதிமுறைகள் தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் விதமாக வடிவமைக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன்படி, தொழிலளார்கள் கம்பெனி அல்லது மனிதவள ஏஜென்சியின் சொந்த செலவில் பஸ் அல்லது வேன் மூலம் தொழிலாளர்களை தமிழகத்திற்கு அழைத்து வர வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வர விரும்பும் நிறுவனம் அல்லது மனிதவள ஏஜென்சிகள், அந்த தொழிலாளர்களின் பெயர், வீட்டு முகவரி, ஆதார் என், செல்போன் எண், பணியிடத்தின் முகவரி, வாகனத்தின் விவரங்கள், தனிமைப்படுத்தும் இடம் உள்ளிட்டவற்றை சமர்பித்து மாவட்ட கலெக்டர் மூலம் இ-பாஸ் பெற வேண்டும்.
இந்த விவரங்களை பரிசீலித்து மாவட்ட கலெக்டர் ஆன்லைன் மூலம் அனுமதி வழங்க வேண்டும். பஸ் அல்லது வாகனங்களில் தொழிலாளர்களை அனுமதிப்பதற்கு முன் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தெர்மல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்திற்குள் வந்ததும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கம்பெனி அல்லது ஏஜென்சியின் சொந்த செலவில் கொரோனா பரிசோதனை (ஆர்.டி.பி.சி.ஆர்) செய்ய வேண்டும். இதில் கொரோனா உறுதி செய்யப்படும் தொழிலாளர்களை சிகிச்சைக்காக மருத்துவமைனைக்கு அனுப்ப வேண்டும். தொற்று இல்லாதவர்களை மாவட்ட நிர்வாகத்தால் ஒப்புதல் பெறப்பட்ட தகுந்த இடத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். இந்த தனிமைப்படுத்தப்பட்ட நாட்களிலும் யாருக்காவது கொரோனா அறிகுறி தென்பட்டால் அவர்களுக்கு நிச்சயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
14 நாட்கள் தனிமை முடிந்தப்பின் கொரோனா அறிகுறி இல்லாதவர்களை வேலைக்கு அமர்த்தலாம். பணியிடத்தில் சோப் மூலம் கைகழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பணியிடத்தில் ஒவ்வொரு நாளும் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தொழிலாளர்களுக்கு அவர்களது உடல்நலன் பற்றி அவர்களுக்கு தெரிந்த மொழியில் கம்பெனி அல்லது முகமையால் அறிவுரை வழங்கப்பட வேண்டும். தொழிலாளர்கள் தங்கும் இடத்தில் காற்றோட்ட வசதி, சுகாதாரம் பேணப்பட வேண்டும். மேலும் தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் சுகாதாரம் குறித்து அடிக்கடி அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு தமிழக அரசு விதிமுறைகளை வகுத்து வெளியிட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments