கட்டாயக் கருக்கலைப்பு, குடும்பக் கட்டுப்பாடு காப்பர்-டி, என சிறுபான்மையினரை வதைக்கும் சீன அரசு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனா தொடர்ந்து பல ஆண்டுகளாகவே மக்கள் தொகையை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் இந்தச் செயல்பாடுகளில் தற்போது ஜின்ஜியாங் மகாணத்தில் உள்ள முஸ்லீம்கள், மற்ற சிறுபான்மை இனத்தவர் மீது சீன அதிகாரிகள் அதிகாரத்தைக் கட்டவிழ்த்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மக்கள் தொகை குறைப்பு நடவடிக்கையின் பொருட்டு ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள முஸ்லீம் பெண்களுக்கு வலுக்கட்டாயமாக அந்நாட்டு அதிகாரிகள் கருக்கலைப்பு, குடும்பக் கட்டுப்பாடு மற்றும் ஐயுடி எனப்படும் காப்பர் – டி பொருத்தும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, சிறுபான்மையின மக்கள் மத்தியில் சீன அரசு அதிக கெடுபிடி காட்டுகிறது என சர்வதேச அளவில் குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து, அமெரிக்காவின் வெளியுறவு செயலர் மைக் பாம்பியா சீன அரசு இதுபோன்று சிறுபான்மை இனத்தவர்களை கொடுமைப் படுத்தக் கூடாது என பகிங்கரமாகக் கருத்துத் தெரிவித்து இருக்கிறார். ஆனால் சீன அதிகாரிகள் இந்தக் குற்றச் சாட்டுகளுக்கு “இது புனையப்பட்ட அறிக்கை” என மறுப்பு தெரிவித்து இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தகக்து.
சீனாவின் பெரும்பாலான மாகாணங்களில் மக்கள் தொகை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. ஆனால் ஜின்ஜியாங் மாகாணத்தில் இதுவரை மக்கள் தொகை பிறப்பு கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்று அந்நாட்டு புள்ளிவிவரக் கணக்குகள் தெரிவிக்கின்றன. இதனால் ஜின்ஜியாங் மாகாணத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் தொகை குறைப்பு நடவடிக்கையில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அந்நடவடிக்கையில் அதிரடி காட்டப்படுகிறது என்று அசோசியேட் பிரஸ்ட் செய்தி வெளியிட்டு இருக்கிறது. சிறுபான்மையினப் பெண்கள் 2 குழந்தைகளைப் பெற்று 3 ஆவதாகக் கருவுற்றிருந்தால் அவர்களுக்கு கட்டாயமாகக் கருக்கலைப்பு செய்யப்படுகிறது. சில நேரங்களில் ஆண்களுக்கு குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப் படுகிறது.
இந்த விதிமுறைகளை மீறினால் செலுத்த முடியாத அளவிற்கு அபராதம் விதிக்கப்படும். பெரும்பாலான நேரங்களில் விதிமுறைகளை மீறும் குடும்பங்களை அதிகாரிகள் தண்டனை முகாம்களுக்கு அனுப்பி விடுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை 30 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தண்டனை முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளதாக அசோசியேட் பிரஸ் தகவல் தெரிவித்து உள்ளது. மாதம் தோறும் அதிகாரிகள் வீடு வீடாக சோதனையில் ஈடுபடுவதாகவும் பெண்களுக்கு மருத்துவ சோதனைகள் மேற்கொள்வது கருக்கலைப்பு செய்வது, காப்பர் –டி பொருத்துவது என அவர்களை கட்டாயப் படுத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் முஸ்லீம்கள் மத்தியில் இந்த கட்டாய நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும் சர்வதேச அளவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 3 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளும் குடும்பங்களுக்கு 2,185 டாலர்கள் அபராதம் விதிக்கப்படுகிறது எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. சீனாவின் மற்ற மாகாணங்களில் 60 விழுக்காடு பிறப்பு குறைக்கப் பட்டு இருப்பதாகவும் ஜின்ஜியாங் மாகாணத்தில் 24 விழுக்காடு மட்டுமே பிறப்பு விகிதம் குறைக்கப் பட்டு இருப்பதாகவும் அந்நாட்டு அரசு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. இதனால் ஜின்ஜியாங் மாகாணத்தில் தற்போது அதிரடி காட்டப் படுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் சொந்த மக்களை அழிக்கும் செயல்பாடுகளில் சீன அரசு ஈடுபடக் கூடாது என்ற விமர்சனக் கருத்துகளும் எழத் துவங்கியுள்ளன. அதுவும் சிறுபான்மையின மக்கள் மீது அந்நாட்டு அதிகாரிகள் அதிகாரத்தை கட்டவிழ்த்து விடுவதாக பரபரப்பு எழுந்துள்ளது. ஆனால் இந்த விவகாரம் குறித்து சீன அதிகாரிகள் சீனாவில் ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற நடைமுறையே பின்பற்றப் படுகிறது. சீனாவில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு இந்த நடைமுறை இரண்டு குழந்தைகள் என்றே இதுவரை பின்பற்றப் பட்டு வருகிறது என விளக்கம் அளித்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments