உணவு சரியில்லை என்று கூறிய வாடிக்கையாளர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய கடைக்காரர்

  • IndiaGlitz, [Thursday,November 09 2017]

தெருவோரத்தில் தள்ளுவண்டியில் உணவு தயாரித்து விற்பனை செய்யும் ஒருவர், வாடிக்கையாளர் ஒருவர் உணவு சரியில்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்து கொதிக்கும் எண்ணெயை துரத்தி துரத்தி ஊற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உல்ஹாஸ்நகர் என்ற பகுதியில் தெருவோரத்தில் சைனீஸ் உணவு தயாரித்து விற்பனை செய்து வரும் ஒருவரிடம் ஒரு வாடிக்கையாளர் உணவு சரியாக வேகவில்லை என்று புகார் கூறியுள்ளார். இதுகுறித்து கடைக்காரருக்கும் வாடிக்கையாளருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதனால் வாடிக்கையாளர் கடையில் உள்ள சேர், டேபிளை உடைத்து சேதப்படுத்தினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கடைக்காரர் அங்கு கொதித்து கொண்டிருந்த எண்ணெயை எடுத்து அந்த வாடிக்கையாளர் மீது ஊற்றினார். இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் அந்த இடத்தை ஓடியபோதிலும் துரத்தி துரத்தி மீண்டும் மீண்டும் எண்ணெயை ஊற்றியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த அந்த வாடிக்கையாளர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கடைக்காரரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.