காய்கறி, பழங்களை மட்டுமே சாப்பிட்ட இன்ஸ்டா பிரபலம் உயிரிழப்பு? டயட் காரணமா?
- IndiaGlitz, [Thursday,August 03 2023]
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சைவ உணவு மட்டுமே உடலுக்கு நல்லது எனக் கூறிவந்த இன்ஸ்டா பிரபலம் ஒருவர் திடீரென்று பட்டினி மற்றும் உடல்சோர்வு காரணமாக உயிரிழந்துள்ளது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைத்தளங்களின் பரவலுக்குப் பின்னர் நிறைய இன்ஃப்ளூயன்சர்களின் வரவு அதிகரித்து விட்டது. அந்த வகையில் ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையை வித்தியாசமாக அமைத்துக்கொண்டு அதுகுறித்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் வீகன் உணவு முறை சிறந்தது எனக் கூறிவந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரஷ்யாவை சேர்ந்த இன்ஸ்டா பிரபலமான ஜன்னா சாம்சோனோவா என்பவர் 39 வயதான நிலையில் கடந்த 10 வருடங்களாக வீகன் உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் இவர் பால் மற்றும் பாலினால் செய்யப்படுகின்ற வெண்ணெய், பாலாடை கட்டி, தயிர், யோகார்ட் மற்றும் நெய் என எதையும் சாப்பிட மாட்டாராம். இந்த வகை உணவுமுறையைப் பொதுவாக வீகன் என்றே குறிப்பிடுகின்றனர்.
மேலும் கடந்த 6 வருடங்களாக தண்ணீரே குடிக்காத இவர் வெறுமனே பழங்கள், சூரியகாந்தி விதைகள், பழச்சாறுகள், துரியன், பாலாப்பழம் போன்றவற்றை சாப்பிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. தனது உணவு முறை குறித்து தொடர்ந்து வீடியோகக்ளை பதிவிட்டு வந்த ஜன்னா ‘என் உடலும் மனமும் தினமும் மாறுவதை நான் காண்கிறேன். இப்போது உள்ள என் புதிய ‘என்னை’ நான் விரும்புகிறேன். பழைய உணவு பழக்கங்களுக்கு போக விரும்பவில்லை’ என்று தனது இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெற்காசிய நாடுகளான இந்தியா, கம்போடியா, வியட்நாம், இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு பயணம் செய்த இவர் தன்னைப் போன்று வீகன் உணவை மட்டுமே உண்டு வாழ்பவர்களை ஒருங்கிணைத்து ஒரு குழுவை உருவாக்கவும் முயற்சித்து இருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தாய்லாந்து வந்த அவருடைய உடல்நிலை மிகவும் மோசடைந்து தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். தீவிர சிகிச்சைக்குப் பின் உடல் சோர்வினால் தவித்து வந்த நிலையில் பலரும் அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர். ஆனாலும் அவற்றைப் புறம் தள்ளிய ஜன்னா மீண்டும் இலங்கைக்குச் சென்ற நிலையில் அங்கு உடல் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து கடந்த ஜுலை 21 ஆம் தேதி ஜன்னா உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து விளக்கம் அளித்த ஜன்னாவின் தயார் காலாரா போன்ற நோய்த்தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகவும் முறையான ஊட்டச்சத்து இல்லாமல் குறைபாடு ஏற்பட்டதால்தான் அவர் உயிரிழக்க நேர்ந்தது என்றும் கூறியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தாய்லாந்து சென்றிருந்த போது அவருடைய நண்பர்கள் சிலர் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியும் அவர் அதைச் செய்ய விரும்பவில்லை என்றும் பின்னர் கால்கள் வீங்கிய நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் அவருடைய தீவிரமான டயட் அல்லது பட்டினிதான் உயிரிழப்புக்கு காரணம் என்பது குறித்து தெளிவான விளக்கங்களை மருத்துவர்கள் கூறவில்லை. ஆனால் அவர் மருத்துவ அறிவுறுத்தல்கள் இல்லாமல் வீகன் உணவுகளை மட்டுமே எடுத்துக் கொண்டதால் உடலுக்கு சீரான ஊட்டச்சத்துகள் இல்லாமல் கடுமையான மன அழுத்ததில் வாழ்ந்து வந்திருக்கலாம் என்று சிலர் கூறிவருவதும் குறிப்பிடத்தக்கது.