சைக்கிளில் உணவு டெலிவரி செய்த நபர்: 24 மணி நேரத்தில் ஏற்பட்ட டுவிஸ்ட்!

  • IndiaGlitz, [Thursday,April 14 2022]

சைக்கிளில் கடந்த 2 ஆண்டுகளாக உணவு டெலிவரி செய்த நபருக்கு 24 மணி நேரத்தில் பைக் கிடைத்த அதிசயம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த துர்காமீனா என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் இருந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் அவர் தனது ஆசிரியர் பணியை இழந்தார். இதனை அடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் உணவு டெலிவரி செய்யும் பணியில் இருக்கிறார். டெலிவரி செய்வதற்கு முதலில் தேவையானது பைக் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பைக் வாங்க அவரிடம் பணம் இல்லை என்பதால் அவர் சைக்கிளிலேயே உணவு டெலிவரி செய்து வந்தார். இதனால் அவருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த ஆதித்ய சர்மா என்பவர் தனக்கு தேவையான உணவை ஆர்டர் செய்த நிலையில் அவருக்கு துர்கா மீனா சைக்கிளில் சென்று உணவு டெலிவரி செய்தார். கொளுத்தும் வெயிலில் வியர்த்து விறுவிறுக்க வந்து அவர் உணவு டெலிவரி செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆதித்ய சர்மா, ‘ஏன் பைக்கில் வரவில்லையா? என்று கேட்டதற்கு தன்னிடம் பைக் வாங்க பணம் இல்லை என்று துர்கா மீனா கூறினார் .

உடனடியாக அவருக்கு உதவி செய்ய முடிவு செய்த ஆதித்ய சர்மா, அவரை சைக்கிளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து தனது டுவிட்டரில் அந்த புகைப்படத்தை பதிவு செய்து அவருக்கு பைக் வாங்க உதவி செய்யுமாறு தனது நண்பர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

24 மணி நேரத்தில் அவருடைய நண்பர்கள் ரூபாய் 75 ஆயிரம் பணம் கொடுத்ததை அடுத்து துர்கா மீனாவை அழைத்துக்கொண்டு பைக் ஷோ ரூமிற்கு சென்று அவருக்கு பிடித்த ஸ்ப்ளெண்டர் பைக் வாங்கி கொடுத்தார். தற்போது அவர் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

சமூகவலைதளங்கள் என்பது எதிர்மறையான கருத்துக்களை மட்டுமே பகிரும் தளம் என்றும், ஒருவரை ஒருவர் மோதிக் கொண்டு நேரத்தை வீணடிக்கும் தளம் என்றும் ஒருசிலர் கூறிவரும் நிலையில் இது போன்ற ஆக்கபூர்வமான செயல்களும் சமூகவலைதளங்கள் மூலம் செய்ய முடியும் என்பதற்கான சிறந்த உதாரணம் இந்த நிகழ்வு என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.