குழந்தைகளைத் தாக்கும் ப்ளூ காய்ச்சல்… தவிர்ப்பது எப்படி?

  • IndiaGlitz, [Thursday,September 15 2022]

தமிழகம் முழுவதும் H1N1 என்று சொல்லக்கூடிய புதிய காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 282 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக H1N1 என்ற வைரஸால் ஏற்படும் ப்ளூ காய்ச்சல் தொற்று பரவிவருகிறது. குழந்தைகளைக் குறிவைத்துத் தாக்கும் இந்த நோயினால் தற்போது சென்னையில் உள்ள பல மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இந்தக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பலர் சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொல்லைகளால் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில் சீதோஸ்ன பிரச்சனை காரணமாக பரவும் இந்த காய்ச்சல் ஒருரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதாகப் பரவும் தன்மைக் கொண்டது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கொரோனா பெருந்தொற்று நேரத்தில் கடைப்பிடித்த மாஸ்க் மற்றும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றினால் இந்த ப்ளூ காய்ச்சல் தொற்றில் இருந்து எளிதாகத் தப்பிக்கலாம் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பாதுகாப்பு வழிமுறைகள்-

ப்ளூ வைரஸ் காய்ச்சலால் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே சிறிய நோய் அறிகுறி தென்பட்டவுடனேயே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாங்களாகவே நோயை சரிச்செய்ய முற்படாமல் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

ப்ளூ காய்ச்சல் சுவாச மண்டலத்தைப் பாதிக்கும் தன்மைக் கொண்டது. எனவே சுவாசக் கோளாறு ஏற்பட்டாலும் மருத்துவரை அணுகுவது நலம்.

வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கும் திரும்பியவுடன் கை கால்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு குழந்தைகளைத் தொடுவது நல்லது.

ஒருவேளை குழந்தைகள் உள்ள வீடுகளில் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு இருந்தால் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.

கொரோனா போன்று வாசனை, சுவை மரத்துப்போதல் பிரச்சனை ப்ளூ காய்ச்சலில் இருக்காது. எனவே அதிகளவில் பயப்பட தேவையில்லை.

உடல்வலி, தலைவலி, சோர்வு, தொண்டை வறட்சி, வாந்தி, வயிற்று வலி போன்ற அறிகுறிகள் இருந்தாலும் ப்ளூ காய்ச்சல் தொற்றாக இருக்கலாம்.

ப்ளூ வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படும் ஒரு நபருக்கு அதிகப்பட்சமாக 4 நாட்கள் வரை காய்ச்சல் இருக்கும். ஒரு சிலருக்கு ஒரு வாரம் வரை வறட்டு இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ப்ளூ காய்ச்சல் தொற்றுக்கு தடுப்பூசி இருக்கிறது. எனவே இதுபோன்ற தொற்றுகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம்.

கொரோனா நேரத்தில் கடைப்பிடித்த முகக்கவசம், தனிநபர் இடைவெளி போன்ற பாதுகாப்பு வழிமுறைகள் இந்நேரத்தில் சிறந்த வழிமுறையாக இருக்கும்.