சொந்த காரில் நீட் தேர்வு மாணவர்களை அனுப்பிய பூவியாபாரி!
- IndiaGlitz, [Sunday,May 06 2018]
இன்று இந்தியா முழுவதும் நடைபெறும் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு எழுதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இருப்பினும் வெளிமாநிலத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு, கேரள அரசு, தன்னார்வல அமைப்புகள், திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சியினர், தனி நபர்கள் என பலர் உதவி செய்ய முன்வந்துள்ளனர்.
இந்த நிலையில் திருச்சியில் பூ வியாபாரம் செய்து வரும் கனகராஜ் என்பவர் மூன்று மாணவ, மாணவிகளை தனது சொந்த காரில் எர்ணாகுளம் தேர்வு மையத்துக்கு அனுப்பி வைத்தார். அதுமட்டுமின்றி மூவருக்கும் தலா ரூ.10ஆயிரம் செலவுக்கு பணமும் கொடுத்து உதவியுள்ளார். அதுமட்டுமின்றி மேலும் ஒருசில மாணவ, மாணவிகளுக்கு ரூ.2500 கொடுத்து எர்ணாகுளத்திற்கு ரயிலில் செல்ல இவர் உதவியுள்ளார்.
பூவியாபாரி கனகராஜ் அவர்களின் இந்த உதவிக்கு மாணவ, மாணவிகளும் அவர்களுடைய பெற்றோர்களும் நன்றி தெரிவித்துள்ளனர். இவர் போன்ற உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர்கள் இருக்கும் வரை வெளிமாநிலத்தில் என்ன, வெளிநாட்டில் நீட் தேர்வை வைத்தால் கூட தமிழக மாணவ, மாணவிகளுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்று நெட்டிசன்கள் புகழாராம் சூட்டி வருகின்றனர்.