திரைப்படங்களுக்கு இனி 5 வகையான சென்சார் சான்றிதழ்.. மத்திய அரசு புதிய சட்டம்..!
- IndiaGlitz, [Thursday,April 20 2023]
திரைப்படங்களுக்கு தற்போது யூ, யூஏ மற்றும் ஏ ஆகிய மூன்று வகை சென்சார் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வரும் நிலையில் இனி ஐந்து வகை சென்சார் சான்றிதழ்கள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை திரைப்படங்களுக்கு யூ, யூஏ மற்றும் ஏ ஆகிய மூன்று வகை சான்றிதழ் மட்டும் வழங்கப்பட்டு வருகின்றன. யூ சான்றிதழ் என்பது அனைத்து வகையான பார்வையாளர்களும் பார்க்கலாம் என்றும், யுஏ சான்றிதழ் என்பது குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் பார்க்க வேண்டிய படங்கள் என்றும் ஏ படங்கள் என்பது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய படம் என்பதும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது U, U/A 7+, U/A 13+, U/A 16+, A ஆகிய ஐந்து வகை தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இது குறித்த சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது.
யுஏ என்பதை மூன்று வகையாக பிரித்து ஏழு வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்க வேண்டிய படம், 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்க வேண்டிய படம் மற்றும் 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்க்க வேண்டிய படம் என பிரிக்கப்படுகிறது. இதற்கு திரை உலகினரிடம் இருந்து எந்த விதமான ரியாக்ஷன் வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.