ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த நிஜ 'மெர்சல்' டாக்டர் காலமானார்: சோகத்தில் சென்னை மக்கள் 

  • IndiaGlitz, [Sunday,August 16 2020]

தளபதி விஜய் நடித்த ’மெர்சல்’ திரைப்படத்தில் ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் டாக்டராக விஜய் நடித்து இருப்பார் என்பது தெரிந்ததே. அந்த நிலையில் நிஜமாகவே ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த சென்னையை சேர்ந்த டாக்டர் வீரராகவன் என்பவர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 70.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த திருவேங்கடம் வீரராகவன் என்பவர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எருக்கம்சேரி மற்றும் வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் 5 ரூபாய் மட்டுமே வாங்கிக் கொண்டு சிகிச்சை அளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1973 ஆம் ஆண்டு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவம் படித்த வீரராகவன் முதலில் இரண்டு ரூபாய்க்கு மட்டுமே மருத்துவம் பார்த்து வந்ததாகவும் அதன் பின்னர் ஐந்து ரூபாயாக அவர் கட்டணத்தை உயர்த்தியதாகவும் தெரிகிறது. ஐந்து ரூபாய்க்கு மட்டுமே அவர் மருத்துவம் செய்ததற்கு சக மருத்துவர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு வந்த போதிலும் அவர் கடைசி காலம் வரை ஐந்து ரூபாய்க்கு மேல் ஒரு பைசா கூட வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காலையில் எருக்கம்சேரியிலும், மாலையும் வியாசர்பாடியிலும் அவர் கடந்த 40 ஆண்டுகளாக மருத்துவ சேவை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நான் மருத்துவ படிப்பை குறைந்த செலவில் படித்தேன். அதே போல் நானும் குறைந்த கட்டணத்தை வாங்கி கொண்டு சேவை செய்ய முடிவு செய்தேன் என்று அவர் தனது சேவை குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இவரது சேவையை பாராட்டி அரசு இவருக்கு சிறந்த மனிதருக்கான விருது வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

மாரடைப்பால் மரணமடைந்த டாக்டர் வீரராகவன் அவர்களுக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் என்பதும், இவரது மனைவி ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் என்பதும் இவரது மகன், மகள் ஆகிய இருவருமே மருத்துவத்துறையில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணம் வாங்கி சேவை செய்த மருத்துவ வீரராகவன் மறைவால் சென்னை மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.