சென்னையில் ஐந்து ரூபாய் டாக்டர் காலமானார். பொதுமக்கள் சோகம்
- IndiaGlitz, [Wednesday,December 19 2018]
'மெர்சல்' படத்தில் ஐந்து ரூபாய் டாக்டராக விஜய் நடித்தது போன்று உண்மையாக கடந்த 41 ஆண்டுகளாக வெறும் ஐந்து ரூபாய் பெற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த சென்னை ராயபுரம் டாக்டர் ஜெயச்சந்திரன் இன்று காலமானார். அவருக்கு வயது 71. இவருடைய மறைவு அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 1971ஆம் ஆண்டு மருத்துவ படிப்பை முடித்த பின்னர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் வண்ணாரப்பேட்டையில் உள்ள வெங்கடாசலம் தெருவில் கிளினிக் ஒன்றை ஆரம்பித்தார். முதலில் ரூ.2 மட்டுமே சிகிச்சைக்கான கட்டணம் பெற்று வந்த டாக்டர் ஜெயச்சந்திரன், பின்னர் நாளடைவில் அதனை ரூ.5 ஆக மாற்றினார். ஒரு சின்ன நோய்க்காக தனியார் மருத்துவமனை சென்றால் ஆயிரக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் கறந்துவிடும் டாக்டர்கள் மத்தியில் கடந்த பல ஆண்டுகளாக எந்த நோயாக இருந்தாலும் ரூ.5 மட்டுமே பெற்று சிகிச்சை அளித்ததால் இவரை அந்த பகுதி மக்கள் ஐந்து ரூபாய் டாக்டர் என்றே அழைத்தனர்.
மருத்துவ சிகிச்சை மட்டுமின்றி அவ்வப்போது மருத்துவ முகாம்களை அமைத்து ரத்த தானம், உடல்தானம், யோகா போன்ற விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வந்தார். மகப்பேறும் மாறாத இளமையும்,'குழந்தை நலம் உங்கள் கையில்', 'தாய்ப்பால் ஊட்டுதலின் மகத்துவம்', 'உடல் பருமன் தீமைகளும் தீர்வுகளும் போன்ற நூல்களை எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இவர் எழுதியுள்ளார். இவரது மனைவி வேணி, மகள், மகன் ஆகியோர்களும் டாக்டர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.