5 கிலோ சிக்கன் ரூ.100: அப்படியும் வாங்க ஆளில்லை
- IndiaGlitz, [Friday,March 20 2020]
கோழிக்கறி மூலம் தான் கொரோனா பரவுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவியதால் பொதுமக்கள் அச்சத்தின் காரணமாக கோழிக்கறி வாங்குவதையே நிறுத்திவிட்டனர். இலவசமாக சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, சில்லி சிக்கன் ஆகியவை எல்லாம் மக்களுக்கு கொடுத்து கோழிக்கறி வியாபாரிகள் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினாலும், ஓசியாக கொடுக்கும்போது மட்டும் வாங்கி சாப்பிட்டுவிட்டு, காசு கொடுத்து வாங்க பொதுமக்கள் தயங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் கோழிக்கறியால் கொரோனா பரவாது என்பதை மீண்டும் மக்களுக்கு உணர்த்த, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் இறைச்சி கடை ஒன்றில் 5 கிலோ கோழி இறைச்சி ரூ.100க்கு விற்பனை செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனை செய்தும் சிக்கன்வாங்க யாரும் ஆர்வம் காட்டாததால் வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா விவகாரத்திற்கு முன் கிலோ ரூ.200க்கும் மேல் விற்பனையான சிக்கன், தற்போது ரூ.20க்கு கூட விற்பனையாகவில்லை என்பது வியாபாரிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் 8 ஆண்டுகளில் இல்லாத அளவில், முட்டையின் விலை ரூ.2க்கும் குறைவாக விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.