இந்திய இசைக்கலைஞர்களில் முதல்முதலாக புதிய பாணியில் இசைநிகழ்ச்சி நடத்தும் அனிருத்
Send us your feedback to audioarticles@vaarta.com
இளம் இசைப்புயல் அனிருத் ஏற்கனவே சிங்கப்பூர் உள்பட பலவேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள நிலையில் வரும் ஜூன் மாதம் முதன்முதலாக லண்டன் மற்றும் பாரீஸ் நகரங்களில் இரண்டு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். இந்த இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துவரும் ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இதுகுறித்து வெளீயிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஜுன் 16 ஆம் தேதியில் இலண்டனில் உள்ள S S E Wembly Arena என்னுமிடத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் இசை நிகழ்ச்சி நடைபெறும் கலையரங்கத்தின் இணையதளத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை பிரபல இணையதளங்களிலும் ( டிக்கெட் மாஸ்டர்) இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.
இசையமைப்பாளர் அனிரூத் லண்டனில் முதன்முறையாக நடத்தும் இசை நிகழ்ச்சி இது. இந்த இசைநிகழ்ச்சி Gig Style Show பாணியில் நடைபெறவிருக்கிறது. இந்திய இசைக்கலைஞர் ஒருவர் இதுபோன்ற வகையில் இங்கிலாந்தில் இசை நிகழ்ச்சி நடத்துவது இதுதான் முதன்முறை. இது இங்கிலாந்து மற்றும் வெளிநாடுகளிலுள்ள அனிரூத் ரசிகர்களையும், லட்சக்கணக்கான இசை ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் அனிரூத் ஜுன் 17 ஆம் தேதியன்று பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் Zenith என்னுமிடத்தில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இங்கு இதுவரை எந்த தமிழ் இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறவில்லை. அனிரூத் அவர்கள் தான் முதன்முறையாக இங்கு இசை நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்துகிறார். இதற்கான டிக்கெட் விற்பனை அடுத்த வாரம் முதல் தொடங்குகிறது.
‘ஒய் திஸ் கொலவெறி...’ என்ற பாடல் மூலம் உலகம் முழுவதும் தனக்கான ரசிகர்களை உருவாக்கியிருக்கும் முன்னணி இளம் இசைகலைஞரான அனிரூத்தின் இசையுலக பயணத்தில் இந்த இசைநிகழ்ச்சி வித்தியாசமான அனுபவமாக இருக்கும். இந்த இசை நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க தமிழ் பாடல்கள் மட்டுமே இடம்பெறவிருக்கிறது. இது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இருந்தாலும் இசை மொழியில்லை என்பார்கள். அதனால் அனிரூத்தின் ரசிகர்களும், இசை ஆர்வலர்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
இசையமைப்பாளர் அனிரூத் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்=இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இணையவிருக்கும் படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அதன் பிறகு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் ‘கோலமாவு கோகிலா ’ என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். இது வரை இருபது திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியிருக்கும் அனிரூத் இளைஞர்களை கவரும் வகையில் இசையமைத்து வருகிறார்.
முன்முறையாக லண்டன் மற்றும் பாரீஸில் நடைபெறவிருக்கும் அனிரூத்தின் இசைநிகழ்ச்சிக்காக எங்கள் நிறுவனங்கள் இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் இந்தியாவில் சிறப்பான முறையில் விளம்பரங்களையும், சந்தைப்படுத்துதலையும் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக லட்சக்கணக்கானவர் இந்நிகழ்ச்சியை நேரலையாக கண்டு ரசிப்பதற்கு ஏற்ற வகையிலான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகிறோம்.
அனிரூத்தின் இசை நிகழ்ச்சி இதற்கு முன் கண்டிராத வகையில் பிரம்மாண்டமானதாகவும், பிரமிக்கத்தக்க வகையிலும் இருக்கவேண்டும் என்பதற்காக கடுமையாக பணியாற்றி வருகிறோம். இந்த இசைநிகழ்ச்சியில் ஜெனிதா காந்தி உள்ளிட்ட பல முன்னணி பாடகர்களும், பாடகிகளும், இசை கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள். இதைப் பற்றிய முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.’
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments