பந்து ஸ்விங் ஆவதைப் பற்றி கவலைப்பட வேண்டுமா? இந்தியக் கேப்டனின் அசத்தல் பேச்சு!
- IndiaGlitz, [Tuesday,February 23 2021] Sports News
உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மொதேரா மைதானத்தில் முதல் சர்வதேசப் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டி இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டி போட்டியாகும். மேலும் மொதேரா மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்றாற்போல வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதோடு பகல்-இரவு ஆட்டமாக இந்தப் போட்டி நடைபெற இருப்பதால் மேலும் ரசிகர்களிடையே பதற்றமும் அதிகரித்து இருக்கிறது.
உலகக் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நோக்கமாகக் கொண்டு விளையாடி வரும் இந்தியக் கிரிக்கெட் அணி எப்படியாவது ஒரு போட்டியில் வெற்றிப் பெற்று விட வேண்டும் என்ற கட்டாயத்தில் தற்போது உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து வீரர்கள் வேகப்பந்து வீச்சில் பலம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் நிலை என்னவாகும் என்ற கேள்வியும் ரசிர்களிடையே இருந்து வருகிறது.
ஆனால் இதுகுறித்து இந்தியக் கேப்டன் விராட் கோலி, எதிரணி பற்றி எல்லாம் கவலை இல்லை. பிங்க் பால் போட்டி குறித்து நாங்கள் நன்றாக உணர்ந்துள்ளோம் எனத் தெரிவித்து உள்ளார். இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கும் நிலையில் நாளை பகல் இரவு ஆட்டமாக டெஸ்ட் போட்டி நடக்க இருக்கிறது. இதனால் லைட் போடப்பட்ட பிறகு இளஞ்சிவப்பு பந்து பயன்படுத்தப்படும். அப்படி பயன்படுத்தும் இளஞ்சிவப்பு பந்து அதிகமாக ஸ்விங் ஆவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்தப் பந்தினை எப்படி இந்திய அணி எதிர்க்கொள்ள போகிறது என்ற கேள்வியே தற்போது பல்வேறு தரப்புகளில் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலைமையை குறித்து கருத்துக் கூறிய இந்தியக் கேப்டன், “இதில் எதிரணி பற்றி கவலை இல்லை. முதல் செசனில் பந்து பேட்டிற்கு சிறந்த முறையில் வரும். அதே வேளையில் பந்தை பார்ப்பது கடினம் என உணர்ந்துள்ளோம். லைட் போட்டபின் முதல் செசனில் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும். பேட்ஸ்மேன் அதற்கு ஏற்றபடி தங்களை மாற்றிக் கொள்வது அவசியம். அதன்பின் மீண்டும் பேட்ஸ்மேன் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.
எங்களுடைய கவனம் முழுவதும் எங்களுடைய அணியின் மீதே இருக்கும். இங்கிலாந்து அணியின் பலம் மற்றும் பலவீனம் பற்றி நான் ஒருபோதும் கவலை அடைந்தது கிடையாது. பந்து அதிகமாக ஸ்விங் ஆகும் அவர்களுடைய சொந்த மண்ணில் நாங்கள் அவர்களை வீழ்த்தியுள்ளோம். ஒரு அணியாக சிறப்பாக விளையாட வேண்டும். இங்கிலாந்து அணியில் பலவீனம் இருக்கலாம். ஆனால் அவர்களை நாங்கள் வீழ்த்துவதில் ஆர்வமாக உள்ளோம்” என்று நம்பிக்கை வார்த்தைகளை கூறி இருக்கிறார்.