கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல் ஐரோப்பிய நாடு!!! நிலவரம் என்ன???
- IndiaGlitz, [Friday,May 15 2020]
அமெரிக்காவை அடுத்து ஐரோப்பியா நாடுகளில் கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி, துருக்கி எனப் பல நாடுகளில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வரும்போது ஒரு நாடு மட்டும் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டதாக அறிவித்து இருக்கிறது.
2 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஸ்லோவேனியாவில் (Slovenia) இதுவரை 1465 கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு இருக்கின்றன. உயிரிழப்பு 103 ஆக பதிவாகி இருக்கிறது. இந்நிலையில் சில தினங்களாக புதிய கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என்றும் நாட்டில் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டதாகவும் அந்நாட்டு அரசு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. கொரோனா விற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டதால் அந்நாட்டில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப் பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
ஸ்லோவேனியாவில் முதல் கொரோனா பாதிப்பு மார்ச் 4 ஆம் தேதி உறுதிப் படுத்தப்பட்டது. தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகமானதால் மார்ச் 12 ஆம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக புதிய பாதிப்புகள் இல்லை என்பதையும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். தற்போது அந்நாட்டில் பிறப்பிக்கப் பட்ட ஊரடங்கு சில கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டு வருகிறது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பொது இடங்களில் கூட்டங்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படும் என்றும் மக்கள் தொடர்ந்து சமூகு விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. மற்ற ஐரோப்பிய ஒன்றியம் நாடுகள் எதுவும் ஊரடங்கு விலக்கலை அறிவிக்காத நிலையில் அதிபர் ஜானெஸ் ஜான்சா கொரோனா நோய்த் தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதாகக் கூறியிருக்கிறார். இந்நிலையில் ஸ்லோவேனியாவில் இன்னும் கொரோனா பாதிப்புகள் இருக்கத்தான் செய்கிறது எனச் சில மாற்றுக் கருத்துகளும் எழுந்துள்ளன. ஊரடங்கு தளர்த்தப் பட்டுள்ள நிலையில் நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு தடையின்றி சென்று வரலாம் எனவும் கூறப்பட்டு உள்ளது. மேலும் புதிதாக நாட்டிற்குள் நுழைபவர்கள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள் என்ற அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் சில ஷாப்பிங்க் மால்களும் அந்நாட்டில் திறக்கப் பட்டுள்ளன. மேலும், கால்பந்து போட்டிகள் மே 23 க்கு பிறகு நடத்தப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் கொரோனா நோய்ப் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகளும் மகிழ்ச்சித் தெரிவித்து வருகின்றனர். ஐரோப்பாவில் வேறு எந்த நாடும் தொற்று நோய் முடிந்ததாக அறிவிக்காத நிலையில் ஸ்லோவேனியா முற்றப்புள்ளி வைத்து விட்டதாக அறிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பின் மூலம் தொழில் நிறுவனங்கள், பொருளாதார நடவடிக்கைகளுக்கு தடை நீக்கப்படும் என மக்கள் எதிர்ப்பார்த்து காத்து இருக்கின்றனர். நோய்ப் பரவலின் ஆரம்பத்தில் ஊரடங்கு ஜுன் வரைக்கும் தொடரும் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது மே மாதம் வரைக்கும் சில கட்டுப்பாடுகள் நீடிக்கும் என அரசு அறிவித்து இருக்கிறது.