கபாலி': முதல் நாள் மற்றும் வார இறுதியில் எதிர்பார்க்கப்படும் உத்தேச வசூல்
- IndiaGlitz, [Thursday,July 21 2016]
நாளை சூரியன் உதிக்கும் முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் முதல் காட்சி முடிந்திருக்கும். சென்னை உள்பட பல நகரங்களில் அதிகாலை 4 மணிக்கே காட்சிகள் தொடங்குகின்றன. தமிழகம் முழுவதிலும் சுமார் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸ் ஆகிற போதிலும் இன்னும் ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்களுக்கு முதல் நாள் காட்சிக்குரிய டிக்கெட்டுக்கள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் புதிய இந்திய சாதனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளில் சென்னையில் மட்டும் ரூ.1.05 கோடியும், வார இறுதி நாட்களில் ரூ.3.5கோடியும் வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் தமிழகம் முழுவதிலும் 18 முதல் 20 கோடி ரூபாயும், வார இறுதியில் 45 முதல் 47 கோடி ரூபாயும் வசூலாக வாய்ப்பு இருக்கின்றது.
300க்கும் அதிகமான திரையரங்குகளில் கேரளாவில் ரிலீஸ் ஆகும் இந்த படம் முதல் நாளில் ரூ.3.5 கோடியும், தெலுங்கு மாநிலங்களில் 600க்கும் அதிகமான திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் இந்த படம் ரூ.12 முதல் 13 கோடியும், கர்நாடகாவில் ரூ.6 கோடியும், வட இந்தியாவில் ரூ.3.5 கோடியும் முதல் நாளில் வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் பிரிமியர் மற்றும் முதல் நாள் காட்சிகளை சேர்த்து அமெரிக்காவில் ரூ.14 கோடியும், பிரிட்டனில் ரூ.2 கோடியும் மலேசியா சிங்கப்பூர், அரபு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ரூ.10 முதல் 12 கோடி வசூலாகும் என தெரிகிறது.
மொத்தத்தில் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.70 முதல் 75 கோடியும், வார இறுதிக்குள் ரூ.155 கோடி முதல் ரூ.165 கோடி வரை வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.