மதுரை நபரை மர்மமாக தாக்கிய கொரோனா வைரஸ்: அதிர்ச்சி தகவல்

உலகிலுள்ள மனித இனத்தையே கடந்த சில மாதங்களாக ஆட்டுவித்து வரும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது

நேற்று முன்தினம் வரை தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது

லண்டனில் இருந்து சென்னை திரும்பிய புரசைவாக்கத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவருக்கும் அதே இலண்டனில் இருந்து திருப்பூர் திரும்பிய 48 வயது நபர் ஒருவருக்கும் மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த 54 வயது நபர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதில் மதுரை நபருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது தான் பெரும் மர்மமாக உள்ளது. இவர் எந்த வெளிநாட்டிற்கும், குறைந்தபட்சம் வெளிமாநிலங்களுக்கு கூட செல்லாத நிலையில் இவருக்கு எப்படி கொரோனா பரவியது என்பது மர்மமாக உள்ளது

இருப்பினும் இந்த நபருக்கு வேறு சில நோய்கள் இருந்ததாகவும் இதனை அடுத்து கொரோனா வைரஸ் அவருக்கு பரவி உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் முதல் முறையாக வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டிற்கு செல்லாத ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாக இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது