கொழுந்துவிட்டு எரிகிறது 27 மாடி கட்டிடம்: 300க்கும் மேற்பட்டோர் கதி என்ன?
- IndiaGlitz, [Wednesday,June 14 2017]
சென்னை தி.நகரில் உள்ள 7 மாடி சென்னை சில்க்ஸ் கட்டிடம் தீக்கிரையாகி 15 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் இடிபாடுகள் முழுவதும் அகற்ற முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இன்று அதிகாலை 1 மணி அளவில் 27 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று முழுவதுமாக தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு படைவீரர்கள் தீயை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர்.
1974ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் 27 மாடிகளில் 120 வீடுகள் உள்ளன. அவற்றில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கட்டிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் பலகோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டதாகவும் இருப்பினும் தீயணைப்பு முன்பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏகப்பட்ட குறை இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கொளுந்துவிட்டு எரியும் இந்த கட்டிடத்தில் இருந்து உயிரை காப்பாற்றி கொள்ள சிலர் கீழே குதித்ததாகவும், மேலும் சிலர் தங்களை காப்பாற்றும்படி கட்டிடத்தின் உள்ளே இருந்து அலறி வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் லண்டனில் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய தீவிபத்தில் இதுவரை 6 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் மீதி நபர்களை காப்பாற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியிருப்புவாசிகள் அனைவரையும் மொட்டை மாடிக்கு வரச்செய்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காப்பாற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சற்றுமுன் வந்த தகவலின்படி இந்த கட்டிடம் சிறிது சிறிதாக இடிந்து வருவதாகவும், இதனால் கட்டிடத்தின் உள்ளே இருப்பவர்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.