தீ விபத்து… 36 பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்றிய செவிலியர்… முதல்வர் நேரில் பாராட்டு!
- IndiaGlitz, [Saturday,June 05 2021]
சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அந்த விபத்தின்போது துரிதமாகச் செயல்பட்ட ஆண் செவிலியர் ஒருவர் அங்கிருந்த 36 குழந்தைகளையும் 11 தாய்மார்களையும் விபத்தில் இருந்து பத்திரமாக மீட்டுள்ளார். இதனால் அந்த செவிலியரை நேரில் அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியதோடு அவருக்கு சிறப்பு செய்து இருக்கிறார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனையில் கடந்த மே 26 ஆம் தேதி இரவு திடீர் மின்கசிவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஏற்பட்ட தீ மளமளவென ஒரு அறை முழுவதும் பரவத் தொடங்கி இருக்கிறது. அந்த அறையில் இருந்த செவிலியர் ஜெயக்குமார் துரிதமாகச் செயல்பட்டு அங்குள்ள ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததோடு தீ அணைப்பானைக் கொண்டு தீயை கட்டுப்படுத்தி உள்ளார். இதனால் அந்த அறையில் இருந்து நோயாளிகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாமல் தடுத்துள்ளார்.
தீ விபத்து ஏற்பட்ட அந்த அறையில் 36 குழந்தைகள் இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை பெற்று வந்ததாகவும் 11 தாய்மார்கள் தங்களது குழந்தைகளுடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் 47 உயிர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளது. இந்த விஷயத்தை அறிந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் செவிலியர் ஜெயக்குமாரை நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்துள்ளார். அதோடு அவருக்கு சிறப்பு பரிசையும் வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.