63 குழந்தைகள் மரணம் எதிரொலி: ஆக்சிஜன் சப்ளை செய்த நிறுவனம் மீது எப்.ஐ.ஆர் பதிவு
- IndiaGlitz, [Sunday,August 13 2017]
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் இல்லாததால் கடந்த ஒரு வாரத்தில் 63 குழந்தைகள் பலியான விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் புயலை கிளப்பி வருகிறது. இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பேற்று உபி முதல்வர் யோகி பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸார் வற்புறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சப்ளை செய்து வந்த புஷ்பா கேஸ் ஏஜென்ஸி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்மையில் புஷ்பா கேஸ் ஏஜென்ஸிக்கு ஆறு மாதகாலமாக அந்த மருத்துவமனையின் நிர்வாகம் ஆக்சிஜன் சப்ளை செய்ததற்கு பணம் கொடுக்கவில்லை. பலமுறை பணம் கேட்ட அந்நிறுவனம் சட்டரீதியிலான நோட்டீஸ் அனுப்பியது மட்டுமின்றி பணம் கொடுக்காவிட்டால் ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்படும் என்று கடந்த ஜூலை 31ஆம் தேதி நேர எச்சரிக்கை கடிதமும் அனுப்பியது.
கேஸ் ஏஜென்ஸியின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்டுகொள்ளாமல் இருந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கைகளையும் எடுக்காத மாநில அரசு தற்போது கேஸ் ஏஜென்ஸி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்திருப்பது ஒருதலைபட்சமான நடவடிக்கை என்று விமர்சனம் எழுந்துள்ளது. குழந்தைகளின் மரணத்திற்கு கேஸ் சப்ளையை நிறுத்தியதுதான் காரணம் என்றால், சப்ளையை நிறுத்தும் அளவிற்கு நடந்து கொண்ட மருத்துவமனை நிர்வாகத்தின் மீது என்ன நடவடிக்கை என்பதை அரசு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.