தமிழ் ராக்கர்ஸ் மீது முதல்முறையாக எப்.ஐ.ஆர்: காவல்துறை அதிரடி
- IndiaGlitz, [Monday,December 11 2017]
தமிழ் திரையுலகினர்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் தமிழ் ராக்கர்ஸ் உள்பட ஒருசில இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், மற்ற சங்கங்களும் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் முதல்முறையாக தமிழ்ராக்கர்ஸ் உள்பட இரண்டு இணையதளங்கள் மீது தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
சென்னை அயனாவரம் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு காவல்துறை ஆய்வாளரிடம் ராஜசேகரன் என்பவர் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் ராஜசேகரன் கூறியிருப்பதாவது: "நான் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாகச் சட்ட நடவடிக்கை எடுக்க அங்கீகரிக்கப்பட்ட நபராக பணிபுரிந்து வருகிறேன். எங்கள் சங்கத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் தயாரித்த 'இப்படை வெல்லும்' என்ற தமிழ்ப்படம் 9.11.2017 தேதியில் திரையிடப்பட்டது.
இந்தப் படத்தை www.tamilrockers.tv, tamilbox.net இணையதளத்தில் எங்கள் அனுமதியின்றி வெளியிட்டனர். 14.11.2017 அன்று மேற்படி பதிவிறக்கம் செய்தும் அந்தப் படத்தின் டிவிடி-ஐ இத்துடன் தங்களின் விசாரணைக்காக இணைத்துள்ளேன். இதுபோல் இந்த இணையதளம் தமிழ் திரைப்படங்களைத் தொடர்ந்து இணையதளத்தில் வெளியிட்டு வருவதுடன் தயாரிப்பாளர்களுக்கும் அரசுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, இந்த இரண்டு இணையதளத்தை தடை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறை அதிரடியாக களமிறங்கும் பட்சத்தில் ஆன்லைன் பைரஸி கட்டுப்படுத்தப்படும் என்று திரையுலகினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.