'மெர்சல்' பட விவகாரம்: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்
- IndiaGlitz, [Saturday,October 21 2017]
தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த வசனங்களுக்கு பாஜகவினர் எதிர்ப்பும் மிரட்டலும் தெரிவித்தபோது கோலிவுட் திரையுலகமே கொந்தளித்து விஜய்க்கும், மெர்சல் படக்குழுவினர்களுக்கும் ஆதரவு தெரிவித்தது.
இந்த நிலையில் விஷால் உள்பட நடிகர் சங்க நிர்வாகிகள் மட்டும் மெளனம் காப்பதாகவும், இதனால் விஜய்க்கும் விஷாலுக்கும் இடையேயான பனிப்போர் வெளிப்பட்டிருப்பதாகவும் வதந்திகள் பரவியது. இந்த நிலையில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சற்றுமுன்னர் மெர்சலுக்கு தனது ஆதரவை விஷால் தெரிவித்துள்ளார்.
மெர்சல் பிரச்சனை குறித்து விஷால் கூறியதாவது: மெர்சல் படத்தில் மக்களுக்கு சமூக கருத்துக்களை தெரிவிக்கும் விஜய்க்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் முரளி ஆகியோருக்கும் எனது நன்றியும் பாராட்டுகளும் உண்டு.
மெர்சல் படத்தில் உள்ள வசனங்கள், காட்சிகளை நீக்க சொல்லி வற்புறுத்துவது கருத்து சுதந்திரத்திற்கு விடப்பட்ட மிரட்டல் ஆகும். ஹாலிவுட் படங்களில் கூட அமெரிக்க அதிபரை கிண்டலடிக்கும் காட்சிகள் உண்டு. ஒரு படத்தில் எல்லோரையும் திருப்தி செய்வது என்பது இயலாத காரியம். தான் நினைத்ததை கூறும் கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. சென்சார் செய்யப்பட்ட படத்தை மீண்டும் சென்சார் செய்ய சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று கூறியுள்ளார்.