திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தல்: 40 வாக்குகள் வித்தியாசத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் தோல்வி!

திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் எஸ்.ஏ.சந்திரசேகர் 40 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாகவும் இயக்குநர் கே பாக்யராஜ் வெற்றி அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலின் வாக்குப்பதிவு வடபழனியில் உள்ள மியூசிக் யூனியன் கட்டிடத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிமாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு முடிவுற்றது.

திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் கே. பாக்யராஜ் மற்றும் எஸ்ஏ சந்திரசேகர் தலைமையில் இரண்டு அணிகள் போட்டியிட்டன. இந்த நிலையில் சற்று முன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குனர் கே.பாக்யராஜ் 192 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் 152 வாக்குகள் பெற்றதையடுத்து அவர் 40 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற கே பாக்யராஜ் அவர்களுக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.