ரஜினியை விளம்பரத்திற்காக பயன்படுத்த வேண்டாம்: சென்னை ஐகோர்ட் கண்டனம்
- IndiaGlitz, [Wednesday,July 25 2018]
சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்களின் பெயர்களை பயன்படுத்தி விளம்பரம் தேட வேண்டாம் என்று வழக்கு தொடுத்த ஒருவருக்கு சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரபல சினிமா பைனான்சியர் போத்ரா என்பவர் கடந்த 2015ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கு ஒன்றில் தயாரிப்பாளரும் ரஜினியின் சம்பந்தியுமான கஸ்தூரி ராஜா தன்னிடம் ரூ-65 லட்சம் கடன் பெற்றதாகவும், ஆனால் அந்த பணத்தை தனக்கு திருப்பி தருவதற்காக அவரது சம்பந்தியான ரஜினிகாந்த் தன்னிடம் உத்தரவாதம் அளித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த வழக்கே சட்டத்தை தனக்கு சாதகமாகவும், தவறாகவும் பயன்படுத்தவே தொடரப்பட்டுள்ளது. சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ள ரஜினிகாந்த்தை வலையில் சிக்க வைக்க வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிரபலமானவர்களை வழக்கில் இணைத்தால் ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிடும் என்ற நோக்கத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் மனுதாரர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். உள்நோக்கத்துடன் தொடரப்படும் இதுபோன்ற வழக்குகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்வதுடன் சட்டத்தை தவறாக பயன்படுத்திய மனுதாரர் போத்ராவுக்கு 25 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கின்றேன்' என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.