தமிழக பட்ஜெட்டில் ரூ.500 கோடியில் ஒரு சூப்பர் அறிவிப்பு.. திரையுலகினர் மகிழ்ச்சி..!
- IndiaGlitz, [Monday,February 19 2024]
2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 500 கோடியில் பூந்தமல்லி அருகே பிரமாண்டமான திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளதால் திரையுலகினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆந்திராவில் இருக்கும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி போல் தமிழகத்திலும் ஒரு பிலிம் சிட்டி அமைக்க வேண்டும் என்று திரை உலகினர் பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் ஒரு முக்கிய அறிவிப்பாக 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
இந்த திரைப்பட நகரில் அதிநவீன வசதிகள் உருவாக்கப்படும் என்றும் அரசு, தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும் இந்த திரைப்பட நகரம் திரையுலகினருக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேசிய போது சென்னை பூந்தமல்லி அருகே திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.