638 முறை கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிடல் காஸ்ட்ரோ

  • IndiaGlitz, [Saturday,November 26 2016]

கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும், கியூபா மக்களின் அன்புக்குரியவரும், சேகுவாராவின் உயிர் தோழருமான பிடல் காஸ்ட்ரோ இன்று காலமானார்.
அமெரிக்காவை எதிர்த்து பேசவே உலகின் பல நாட்டு தலைவர்கள் பயந்த நிலையில் அமெரிக்காவுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தவர் பிடல் காஸ்ட்ரோ. அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கையை ஆதரித்த அன்றைய கியூபா அரசை சேகுவாராவுடன் இணைந்து போராடி அந்த ஆட்சியை வீழ்த்தி 1959 முதல் 1976 வரை பிரதமராகவும், அதன் பின்னர் 1976 முதல் 2008ம் ஆண்டு வரை கியூபாவின் அதிபராகவும் பதவி வகித்தார்.
பிடல் காஸ்ட்ரா ஆட்சிக்கு வந்த பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியம் முடிவுக்கு வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா இவரை கொலை செய்ய அமெரிக்காவின் சிஐஏ 638 முறை முயன்றதாக பிரிட்டிஷ் ஊடகம் Channel 4 ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. அந்த ஆவணப்படத்திற்கு “பிடல் காஸ்ட்ரோவை கொல்ல 638 வழிகள்” என்ற தலைப்பையே வைத்தது.
இந்த 638 வழிகளில் விஷம் கொடுப்பது, ரசாயனம் தெளிப்பது, குண்டு போடுவது, துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, சுருட்டில் விஷம் தடவுவது, விபத்து ஏற்படுத்துவது, விஷ மாத்திரை கொடுப்பது, மாஃபியா கும்பலை வைத்து கொல்ல செய்ய முயல்வது, ஆகியவை அடங்கும். கடைசியாக பிடல் காஸ்ட்ரோவின் காதலியை வைத்தும் கொலை செய்ய முயன்றது சிஐஏ. ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட கொலை முயற்சி திட்டங்கள் அனைத்தும் சிஐஏ வின் தணிக்கை பிரிவில் இடம்பெற்றுள்ளது
இவ்வாறு அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனாக இருந்த பிடல் காஸ்ட்ரோ இன்று காலமானதை அடுத்தெ கியூபா மக்கள் கண்ணீர்கடலில் மூழ்கியுள்ளனர்.