கொரோனாவுக்கு நடுவில் களைகட்டும் சில விளையாட்டுப் போட்டிகள்!!! புதிய விதிமுறைகள்!!!
- IndiaGlitz, [Wednesday,June 17 2020] Sports News
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒருதுறையாக விளையாட்டும் இருந்து வருகிறது. விளையாட்டுப் போட்டிகள் பொதுவாக பார்வையாளர்களால் களைக் கட்டும்போது அதன் சுவாரசியமே தனி. ஆனால் தற்போது கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக உலகின் பல முக்கிய விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டு இருக்கின்றன. சில போட்டிகள் ரத்து செய்யப் பட்டும் இருக்கிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகமின்றி இருப்பதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக புதிய விதிமுறைகளுடன் சில விளையாட்டுப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. பல போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடைபெற இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
NBA (கூடைப்பந்து)- கொரோனாவிற்கு முன்பே தொடங்கப்பட்ட மார்க்யூ லீக் போட்டிகள் தற்போது மீண்டும் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிகளில் பார்வையாளர்கள் யாரும் கலந்து கொள்ள முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்காக போட்டிகளில் தொடர்புடைய 22 அணிகள் புளோரிடாவில் உள்ள டிஸ்னி வேல்டு க்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட டிஸ்னி வேர்ல்டு நிலப்பரப்பில் 3 அரங்குகள் கொண்ட விளையாட்டு அரங்கம் இருக்கிறது. White world of Sports எனப்படும் இந்த இடத்தில்தான் மார்க்யூ லீக் சீசன் மீண்டும் தொடங்க இருக்கிறது. இந்நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிப்பரப்பப் படும் எனவும் தெரிகிறது.
United state tennis Association டென்னிஸ் போட்டிகளை ரத்து செய்வது குறித்த எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் நிர்வாகக்குழு வீரர்களுக்கு சோதனை நடத்தப்படுவது முதற்கொண்டு அனைத்து ஏற்பாடுகளையும் தற்போது கவனித்து வருகிறது.
இங்கிலாந்து விண்டீஸ் (கிரிக்கெட்) போட்டிகள்
கடந்த 2 மாதமாக எந்த கிரிக்கெட் போட்டியும் நடைபெறாத நிலையில் விளையாட்டு வீரர்கள் வெறுமனே தங்களது கருத்துகளை மட்டுமே பகிர்ந்து கொண்டு வந்தனர். இந்நிலையில் இங்கிலாந்தில் விண்டீஸ் கிரிக்கெட் போட்டிகள் தொடர் நடைபெற இருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் அணியின் 25 வீரர்கள் மற்றும் அவர்களுக்குத் துணையாக 11 துணை வீரர்கள் போன்றோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தற்போது இங்கிலாந்திற்கு புறப்பட்டு சென்றுள்ளனர். ஓல்ட் டிராஃபோட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் தற்போது வீரர்கள் 2 வாரக்காலத்திற்கு தனிமைப்படுத்தப் பட்டு உள்ளனர்.
2 வாரம் கழித்து வீரர்கள் மீண்டும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சீசன் தொடங்க உள்ளது. போட்டிக்கான அனைத்து நிர்வாகப் பணிகளையும் இங்கிலாந்தின் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் கவனித்து வருகிறது. முதல் டெஸ்ட்போட்டி வருகிற ஜுலை 8 ஆம் தேதி சவுதாம்ப்டனில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிகளில் குறைவான ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீரர்களும் குறைந்தது 3 அல்லது 4 போட்டிகளில் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது. சீசன் முடியும் வரை வீரர்களுக்கு வெளியே செல்ல அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.
பிரிமீயர் கால்பந்து போட்டிகள்
வருகிற 17 ஆம் தேதியில் இருந்து பிரிமீயர் கால்பந்து போட்டிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கான பயிற்சி ஆட்டங்களில் தற்போது வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பயிற்சி ஆட்டங்களின்போது ஒருவருக்கு ஒருவர் தொடுவது தடை செய்யப்பட்டு இருக்கிறது. வாரத்திற்கு 2 முறை வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்றும் போட்டி நடைபெறும் கிரவுண்ட்டில் இருந்து பார்வையாளர்கள் பகுதி முழுவதும் தடை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.
ஜெர்மன் பன்டெஸ்லிகா கால்பந்து போட்டிகள்
இந்தப் போட்டியை நடத்துவதற்காக அதன் வீரர்கள் கடந்த மே 16 ஆம் தேதி முதல் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். வாரத்திற்கு 2 முறை வீரர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்படுவதாக நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதைத்தவிர இந்த சீசன் முடியும் வரை 2 ஆயிரம் கொரோனா பரிசோதனை செய்வதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிக பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் போட்டிகள் நடைபெறும் என நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.