தந்தையின் இறுதிச்சடங்கை தள்ளிவைத்து சுதந்திரத்தின விழாவில் கலந்துகொண்ட பெண் காவல் ஆய்வாளர்!!!
- IndiaGlitz, [Tuesday,August 18 2020]
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஆயுதப்படை காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் மகேஸ்வரி. கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி பாளையங்கோட்டையின் வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திரத் தின விழாவில் காவல்துறை அணிவகுப்பை தலைமையேற்று நடத்தினார். இந்த அணிவகுப்பு நடைபெறுவதற்கு முந்தின இரவு அவருடைய தந்தை நாராயணசாமி (83) உயிரிழந்த செய்தி மகேஸ்வரிக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்காக திண்டுக்கல் மாவட்டம் வடமதுரைக்கு அவர் வரவேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர். ஆனாலும் அடுத்த நாள் காலை நடைபெற இருக்கும் சுதந்திரத்தின விழாவில் காவல் துறையினரின் அணிவகுப்பை தலைமையேற்று நடத்த வேண்டும் எனத் தனது கடமையைக் கூறி மறுத்து இருக்கிறார்.
ஆகஸ்ட் 15 அன்று பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற காவல்த் துறையினரின் அணிவகுப்புக்கு மகேஸ்வரிக்கு தலைமையேற்று மிகச் சிறப்பாக நடத்திக் கொடுத்திருக்கிறார். அப்போது தன்னுடைய தந்தையின் இறப்பை துளியும் காட்டிக் கொள்ளாமல் கடமை உணர்ச்சியோடு மகேஸ்வரி நடந்து கொண்டதை பார்த்த உடன் பணியாற்றும் காவலர்கள் மனம் நெகிழ்ந்து போயிருக்கின்றனர். இதுபற்றி கூறிய மகேஸ்வரி திடீரென்று அணிவகுப்புக்கு வேறு யாரையும் தலைமையேற்க சொல்ல முடியாது. அதனால் நானே தலைமை ஏற்பது என முடிவு செய்துவிட்டேன் எனத் தெரிவித்து இருக்கிறார்.
இந்நிலையில் மகேஸ்வரியின் செயலுக்குத் தற்போது பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். காவல் துறையினரின் அணிவகுப்பைச் சிறப்பாக நடத்தி முடித்து விட்டப்பின் மகேஸ்வரி தனது சொந்த ஊரான வடமதுரைக்கு கிளம்பிச் சென்றிருக்கிறார். தந்தையின் இறப்பிலும் தனது கடமைதான் பெரிது என்ற பெண் காவல் ஆய்வாளரின் உணர்ச்சிக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.