வீடு வீடாக கொரோனா பரிசோதனை நடத்திய மர்மநபர்கள்… இளம்பெண் மாயமான அவலம்!!!

  • IndiaGlitz, [Thursday,September 10 2020]

 

பெங்களூருவில் இளம்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகக் கூறி மர்மநபர்கள் ஆம்புலஸில் அழைத்துச் சென்ற சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூருவில் உள்ள பொம்மனஹள்ளி பகுதியில் அதிக கொரோனா பாதிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநகராட்சி சார்பாக வீடு வீடாக கொரோனா சோதனை நடத்துகிறோம் எனக்கூறி முழுநீளப் பாதுகாப்பு உடையுடன் மர்மநபர்கள் பொம்மனஹள்ளி பகுதிக்கு வந்திருக்கின்றனர். மேலும் தற்போது மாயமாகி இருக்கும் பெண்ணின் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா மாதிரிகளையும் எடுத்துள்ளனர்.

அதைத்தவிர அக்கம் பக்கத்தில் இருந்த வீடுகளிலும் அந்த மர்மநபர்கள் கொரோனா மாதிரிகளை சேகரித்துள்ளனர். அதையடுத்து நேற்றுமுன்தினம் முளுநீள பாதுகாப்பு உடையணிந்த 2 பேர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்து உங்கள் பெண்ணுக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவு கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவித்து இருக்கின்றனர். இதனால் பதறிப்போன பெற்றோர்கள் அப்பெண்ணை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்திருக்கின்றனர். அதோடு செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றும் அந்த மர்மநபர்கள் கூறியதால் செல்போனை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் அப்பெண்ணின் கணவர் தனது மனைவியின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள மர்மநபர்கள் சொன்ன தனியார் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அங்கு விசாரித்ததில் கடந்த 4 நாட்களாக பொம்மனஹள்ளி பகுதியில் இருந்து எந்த நோயாளியும் அனுமதிக்கப் படவில்லை. அதோடு ஒருவேளை மாநகராட்சி ஊழியர்கள் கொரோனா பாதிப்பு உள்ளவர்களை அழைத்துச் சென்றால் சம்பந்தப்பட்ட நபர்களின் செல்போனுக்கு உடனே ஆம்புலன்ஸ் வாகனம், அதன் ஓட்டுநர் குறித்த தகவல்கள் அனுப்பப்படும். இந்த சம்பவத்தில் அப்படி எதுவும் அனுப்பப் படவில்லை என விளக்கி இருக்கின்றனர்.

இச்சம்பவத்தால் அதிர்ந்து போன குடும்பம் தற்போது காவல் நிலையத்தை நாடியிருக்கிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் இளம்பெண்ணை அழைத்துச் சென்றது யார்? ஆம்புலன்ஸ் வாகனம் எங்கு சென்றது எனப் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் கொரோனா சிகிச்சை முடிந்து கொரோனா மையத்திற்கு தனியாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்த இளம் பெண்ணை டிரைவரே கற்பழித்த கோரச்சம்பவம் நடைபெற்றது. தற்போது இளம்பெண் மாயமான விவகாரம் நடைபெற்று இருக்கிறது. இதனால் கொரோனா நோயாளிகளுக்கு மத்தியில் ஒருவித பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.